ஆந்திராவில் நுரையீரல் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தையின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும்: முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

ஆந்திராவில் நுரையீரல் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தையின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும்: முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
Updated on
1 min read

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், முலகல செருவு அடுத்துள்ள பத்தலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஏழை தம்பதிகளான ரமணப்பா, சரஸ்வதிக்கு ஞான சாய் எனும் 8 மாத பெண் குழந்தை உள்ளது. இக்குழந்தைக்கு பிறந்தது முதலே நுரையீரல் தொடர்பான பிரச்சினை இருந்து வந்தது.

குழந்தையை காப்பாற்ற அறுவை சிகிச்சை செய்வதற்கு ரூ. 50 லட்சம் வரை செலவாகும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஏழை விவசாயியான ரமணப்பா ஏற்கெனவே மருத்துவ செலவுகளுக்காக தன்னிடம் இருந்த 2 ஏக்கர் நிலத்தை அடகு வைத்துள்ளார். இந்நிலையில், நாளுக்கு நாள் குழந்தையின் உடல் நலம் குன்றி வந்தது. குழந்தையை காப்பாற்ற முடி யாத நிலையில், அதன் வேதனைக்கு முடிவுகட்டும் விதமாக, குழந்தையை கருணைக் கொலை செய்ய சித்தூர் மாவட்டம், தம்பல பல்லி நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்தனர். ஆனால், மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார். இதுதொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியானது.

இதையடுத்து, ரமணப்பாவின் குழந்தைக்கு தேவையான மருத்துவச் செலவுகளை அரசே ஏற்கும் என, முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று அறிவித்தார்.

சென்னையில் அறுவைசிகிச்சை

நுரையீரல் பாதிக்கப்பட்ட குழந்தை ஞான சாய்க்கு சென்னை யில் உள்ள க்ளோபல் மருத்துவ மனையில் அறுவைசிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் குழந்தை ஞான சாயியை நேற்று பரிசோதித்த பிரபல மருத்துவர் முகமது ரேலா, ‘குழந்தைக்கு நுரையீரலால் பாதிப்பல்ல, கல்லீரல் பாதிக்கப் பட்டுள்ளது. இப்பிரச்சினையை பித்தப்பை வளர்ச்சியின்மை (பிலியரி அட்ரீசியா) என்றழைக் கின்றனர். உடனடியாக மாற்று கல்லீரல் அறுவைசிகிச்சை செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, வரும் ஞாயிற்றுக்கிழமை க்ளோபல் மருத்துவமனையில் குழந்தையை சேர்த்து, பரிசோதனைகள் மேற் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கல்லீரலை தனது குழந்தைக்கு தானமாக கொடுக்க தந்தை ரமணப்பாவே முன் வந்துள்ளதால் அவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in