Last Updated : 15 Jun, 2016 04:43 PM

 

Published : 15 Jun 2016 04:43 PM
Last Updated : 15 Jun 2016 04:43 PM

ரோஹித் வெமுலா தலித் சமூகம்தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு

ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் தற்கொலை செய்து கொண்ட ஆய்வு மாணவர் ரோஹித் வெமுலா தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிக்கை ஒன்றை குண்டூர் மாவட்ட கலெக்டர் காந்திலால் தாண்டே தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கான தேசிய ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளார்.

குண்டூர் கலெக்டர் சமர்ப்பித்த அறிக்கையின்படி ரோஹித் வெமுலா மலா என்ற சாதியைச் சேர்ந்தவர்.

அந்த அறிக்கையின் ஒரு பகுதியில் கூறப்பட்டிருப்பதாவது: குண்டூர் தாசில்தாரிடம் உள்ள ஆவணம் சார்ந்த ஆதாரங்களின்படி ஸ்ரீ.ரோஹித் சக்ரவர்த்தி வெமுலா இந்து மலா பிரிவைச் சேர்ந்தவர். இது ஆந்திராவில் தாழ்த்தப்பட்ட சாதிப்பிரிவில் உள்ளது. மேலும் அவரது குடும்பம் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் பட்டியலில் உள்ளது.

ரோஹித் வெமுலாவின் பாட்டி, மற்றும் பிறரது நேரடி வாக்குமூலங்களும் இதற்கு ஆதரவாக அறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

வெமுலா தற்கொலைக்குப் பிறகே அவர் சார்ந்த சாதி குறித்த வாதங்கள் எழுந்தன, வெமுலாவின் தந்தை அவரை வெத்தரா சமூகத்தைச் சேர்ந்தவர் என்று கூறினார், இது ஓபிசி பிரிவைச் சேர்ந்தது.

எனவே தற்போது தலித் பிரிவைச் சேர்ந்தவர் என்பது உறுதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டால், தாழ்த்தப்பட்ட/பழங்குடியினருக்கு எதிரான வன்முறைகள் சட்டத்தின் கீழ் மேற்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகை பிறக்கும். ஏற்கெனவே இந்த சட்டத்தின் கீழ் பல்கலைக் கழக துணை வேந்தர் பி.அப்பாராவ், மத்திய அமைச்சர் பந்தாரு தத்தாத்ரேயா உட்பட 5 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தற்போது மாவட்ட கலெக்டரே ரோஹித் வெமுலா ஒரு தலித் என்று அதிகாரபூர்வ அறிக்கை சமர்ப்பித்திருப்பதால் வெமுலாவின் தந்தையோ போலீஸோ இதனை விசாரணையின் போது கேள்வி எழுப்ப வழியில்லை என்று வழக்கறிஞர் குன்ரத்தன் கூறுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x