Last Updated : 24 Sep, 2013 10:18 AM

 

Published : 24 Sep 2013 10:18 AM
Last Updated : 24 Sep 2013 10:18 AM

உத்தரப்பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி?

கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரப்பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என அம்மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் அக்கட்சியின் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 40 எம்.எல்.ஏக்கள் மற்றும் 9 எம்பிக்கள் குடியரசுத் தலைவர் பிராணப் முகர்ஜியை ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, உத்தரப் பிரதேசத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் எனவும், முசாபர் நகர் வகுப்புக் கலவரம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இந்த சந்திப்பிற்கு பிறகு, குடியரசுத்தலைவர் மாளிகை முன்பு செய்தியாளர்களிடம் ராஜ்நாத் சிங் கூறியது:

முசாபர் நகரில் பெண்களை கேலி செய்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வகுப்புக் கலவரமாக மாறி உள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டாக உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து வகுப்புக் கலவரங்கள் நடந்த வண்ணம் உள்ளன. அரசியல் ஆதாயம் கருதி வகுப்புக் கலவரத்தைக் கட்டுப்படுத்த ஆளும் சமாஜவாதி கட்சி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இதை நன்கு அறிந்தும் மத்தியில் ஆட்சி செய்யும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. எனவே, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதை விட வேறு வழியே இல்லை. கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இதுதொடர்பாக, குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளோம். மேலும், பா.ஜ.க. தலைவர்கள் மீதான வகுப்புவாத வழக்குகளை வாபஸ் பெற உத்தரவிட வேண்டும் எனவும் குடியரசுத் தலைவரிடம் வலுயுறுத்தி உள்ளோம் என்றார்.

இவருடன், உமா பாரதி, வருண் காந்தி, வகுப்புக் கலவரத்தில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட எம்.எல்.ஏ. ஹுக்கும் சிங், பா.ஜ.க. தலைமை நிலைய செய்தித் தொடர்பாளர்களான தினேஷ் திரிவேதி மற்றும் காந்த் ஆகியோரும் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x