ஆதாரமின்றி குற்றம் சாட்டும் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் வேண்டும்: தேர்தல் ஆணையம் மீண்டும் வலியுறுத்தல்

ஆதாரமின்றி குற்றம் சாட்டும் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் வேண்டும்: தேர்தல் ஆணையம் மீண்டும் வலியுறுத்தல்
Updated on
1 min read

தேர்தல் ஆணையத்தின் மீது ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டும் அரசியல் கட்சிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க அதிகாரம் வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை தேர்தல் ஆணையம் நேற்று மீண்டும் நியாயப்படுத்தி உள்ளது.

ஒவ்வொரு தேர்தலின்போதும் தலைமை தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக அரசியல் கட்சியினர் புகார் கூறி வருகின்றனர். இதுதொடர்பான கேள்விக்கு தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி டெல்லியில் நேற்று கூறியதாவது:

சில அரசியல் கட்சிகள் ஆதாரம் இல்லாமல் தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்து கின்றன. இதுபோன்ற சூழலில் சம்பந்தப்பட்ட கட்சிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆணையத்துக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். இது ஏன் என்று கேட்கிறீர்கள்.

அரசியல் கட்சிகளை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்கீழ் தண்டிக்க வேண்டும் என்பது எங்களது நோக்கம் அல்ல. ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகள் கூறுவதைத் தடுக்கவே இந்த அதிகாரத்தைக் கோருகிறோம்.

இப்போதுள்ள சட்டப்படி ஆதாரமின்றி குற்றச்சாட்டுகளைச் சுமத்துவோர் மீது அவமதிப்பு வழக்கு தொடரலாம். ஆனால், புகார்தாரராக நீதிமன்றத்துக்கு செல்ல நாங்கள் விரும்பவில்லை. எனவே, இதற்கு நீதிமன்ற அவமதிப்பு அதிகாரத்தை ஆணையத்துக்கு வழங்குவதுதான் சிறந்த வழியாக இருக்கும் என்று கருதுகிறோம்.

இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்தார்.

முன்னதாக, தேர்தல் ஆணையர் கள் ஏ.கே.ஜோதி மற்றும் ஓ.பி.ராவத் ஆகியோரின் நடுநிலைமை குறித்து டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in