

தெஹல்கா இதழ் முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது, பெண் பத்திரிக்கையாளார் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ள விவகாரத்தில், தனக்கு முன் ஜாமீன் கோரி தருண் தேஜ்பால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தருண் தேஜ்பால் சார்பில், அவரது வழக்கறினர்கள் கீதா லுத்ரா, பிரமோத் துபே நீதிபதி ஜி.எஸ்.சிஸ்டாணி முன்னிலையில் மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தப் பாலியல் வன்கொடுமைச் சம்பவம், நவம்பர் 5 முதல் 10-ம் தேதி வரை கோவாவின் ஐந்து நட்சத்திர ஓட்டலில், ‘யோசனை விழா’ என்ற பெயரில் தெஹல்கா நடத்திய கூட்டத்தின்போது நடந்ததாக கூறப்படுகிறது.
தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீதான பாலியல் புகார் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரித்து வரும் கோவா போலீசார் முக்கிய சாட்சியங்களிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதோடு சில ஈமெயில் ஆதாரங்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். அவற்றை ஆராய்ந்த பிறகு தருண் தேஜ்பாலிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
விசாரணை வளையம் விரிவடந்து வரும் நிலையில், முன் ஜாமீன் கோரி தருண் தேஜ்பால், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.