

சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பை கர்நாடக அரசின் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா வரவேற்றுள்ளார்.
கடந்த 2004-ம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா உள்ளிட் டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூருவுக்கு மாற்றப் பட்டபோது அரசு வழக்கறிஞராக ஆச்சார்யா நியமிக்கப்பட்டார். பெங்களூரு சிறப்பு நீதிமன்றத் தில் தொடங்கி உச்ச நீதிமன்றம் வரை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இவ்வழக்கில் ஆச்சார்யா திறம்பட வாதிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளி யாகியுள்ள நிலையில் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கூறிய தாவது: அரசியல்வாதிகளுக்கு எதிரான ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அனைவரும் வரவேற்கக்கூடிய சிறப்பான தீர்ப்பை அறிவித்திருக்கிறது. இந்திய நீதித் துறை சுதந்திரமானது.
அரசியல், அதிகார சார்பற்றது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட் டுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் ஊழல் அரசியல்வாதிகளுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை மணி அடித்துள்ளது. ஊழல் குற்றவாளிகள் சட்டத்தின் பிடியி லிருந்து தப்பிக்க முடியாது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பினால் சசிகலா,சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி சசிகலா 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. வழக்கின் அனைத்து சாட்சியங்களையும், அரசு சான்று ஆவணங்களை யும் முறையாக பரிசீலித்து நீதிபதி குன்ஹா தீர்ப்பு வழங்கினார்.
கர்நாடக உயர் நீதிமன்றம் வருமானத்துக்கு அதிகமான சொத்துகளைக் கணக்கிட்டதில் தவறு செய்துவிட்டது. இல்லை யென்றால் நால்வரும் அப்போதே தண்டிக்கப்பட்டு இருப்பார்கள். இறுதியாக உச்ச நீதிமன்றம் ஆதாரங்களை கருத்தில் கொண்டு நீதியை நிலைநாட்டி இருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.