

கேரள மாநிலத்தில் 12 வயது சிறுவனுக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், அவர் மீது பாஸ்கோ சட்டத்தின் கீழ் பலாத்காரம் மற்றும் பாலியல் அத்துமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 17 வயதே நிரம்பிய குழந்தையின் தாய் மீதும் குழந்தைகள் பாலினக் கொடுமை (போஸ்கோ சட்டம்) தடுப்புச் சட்டப்படி, சட்டப்பிரிவுகள் 7.8-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ஒரு மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன்னால் 17 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. பாலியல் கொடுமைகளில் இருந்து சிறுவர்களைப் பாதுகாக்கும் (POCSO) சட்ட விதிகளின் அடிப்படையில் அவர்களைப் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சிறுவன்தான் இந்தியாவின் இளம் தந்தையாக இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட 12 வயது சிறுவன் மற்றும் 17 வயது சிறுமியின் மீது போஸ்கோ சட்டப்பிரிவுகளின் கீழ் பலாத்காரம் மற்றும் பாலியல் அத்துமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கின் விநோதம்..
இந்த வழக்கின் விநோதம் என்னவென்றால், ஒரு பிரிவின் கீழ் குற்றவாளியாக பார்க்கப்படும் சம்பந்தப்பட்ட நபர் மற்றொரு சட்டப்பிரிவின்படி பாதிக்கப்பட்டவராகக் கருதப்படுவார். இந்த வழக்கு இப்போது, சிறுவன், சிறுமி மற்றும் அவர்களுடைய குழந்தை என மூன்று சிறாரின் நலன் சார்ந்ததாக மாறியுள்ளது.
இந்த வழக்கை விசாரித்துவரும் அதிகாரிகள், குழந்தைக்கு 12 வயது சிறுவன்தான் தந்தை என்பது உறுதியாகிவிட்டது. எனவே, பாலுறவு கொள்வதற்கு இருவரில் யார் முதலில் தூண்டியது என்பதின் அடிப்படையில் நீதி வழங்கப்படும் எனக் கூறுகின்றனர்.
மாநிலத் தலைவர் கூறுவது என்ன?
இந்நிலையில், கேரள மாநில குழந்தைகள் நல வாரியத் தலைவர் சோபா கோஷி, "இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று குழந்தைகளின் உரிமையும் பேணப்பட வேண்டும். குற்றம் புரிந்தவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் குழந்தைகள் என்பதால் அவசரகதியில் எந்த ஒரு முடிவுக்கும் வந்துவிட முடியாது. குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி 18 வயது கீழ் உள்ளவர்களை ஆண், பெண் என்று பிரித்துப் பார்ப்பதில்லை, குழந்தைகளாகவே பாவிக்கிறோம். போலீஸார்தான் இவ்வழக்கில் குற்றவாளி யார் பாதிக்கப்பட்டவர் யார் என்பதை முடிவு செய்ய வேண்டும்" என்றார்.