

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இறுதி வாதம் பிப்ரவரி 3-ம் தேதி நடைபெறும் என நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா,வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் ஆஜராகவில்லை. குற்றம் சாட்டப் பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரும் மனுவை ஜெயலலிதா வின் வழக்குரைஞர் பி.குமாரும் சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கரும் தாக்கல் செய்தனர்.
இதற்கு திமுக பொது செயலாளர் அன்பழகனின் வழக்கறிஞரும் தர்மபுரி எம்.பி.யுமான தாமரைசெல்வன் எதிர்ப்பு தெரிவித்தபோதும்,அரசு வழக்கறிஞர் பவானி சிங் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.
அம்மனுவில் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருப்பதால் வழக்கில் ஆஜராக இயலவில்லை. சசிகலாவிற்கு கண்ணில் பாதிப்பு; சுதாகரனுக்கு மூட்டுவலி; இளவரசிக்கு சர்க்கரை நோய் ஆகிய காரணங்களால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை படித்து பார்த்த நீதிபதி டி'குன்ஹா,''நீதிமன்றத்தில் ஆஜாராவதில் இருந்து விலக்கு கோரும் மனுவில் உரிய மருத்துவ சான்றிதழ்கள் இணைக்கப்பட வில்லை. இருப்பினும் இந்த முறை மட்டும் இம்மனுக்களை ஏற்றுக்கொள்கிறேன்' என்றார்.
ஜெயலலிதா புதிய மனு தாக்கல்
அதனைத் தொடர்ந்து ஜெய லலிதாவின் வழக்கறிஞர் பி.குமார் புதிய மனு தாக்கல் செய்தார்.அதில் சொத்துக்குவிப்பு வழக்கின் முதல் கட்ட விசாரணையின்போது தமிழக லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் ஜெயலலிதாவின் இல்லத்தில் இருந்து கைப்பற்றிய நினைவு பரிசு பொருள்களை வழக்கில் சான்று பொருள்களாக ஏற்கவில்லை.எனவே அவை சென்னையில் உள்ள அரசு கருவூலத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
தற்போது உங்கள் (நீதிபதி டி'குன்ஹா) முன்னிலையில் வழக்கு தொடர்புடைய ஜெயலலிதா வின் அசையும் சொத்துக்களை சென்னையில் இருந்து பெங்களூர் கொண்டு வந்தனர். அப்போதும்கூட இந்த நினைவு பரிசுப் பொருள்கள் பெங்களூருக்கு கொண்டு வரப்பட வில்லை. எனவே வழக்கின் குறிப்பிடப்படாத பொருட்களான ஜெயலலிதாவின் 144 நினைவு பரிசுபொருள்களை மீண்டும் அவரிடமே ஒப்படைக்க வேண்டும்' என கோரப்பட்டிருந்தது.
கால தாமதம் கூடாது!
இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி டி'குன்ஹா, மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை கேட்டார். அதற்கு பதிலளித்த பவானி சிங்,'பதில் மனு தாக்கல் செய்ய எனக்கு 2 வார கால அவகாசம் தேவைப்படுகிறது. 2 வாரத்திற்கு வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்' என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதி டி'குன்ஹா,''கடந்த 17 ஆண்டுகளாக சொத்துக்குவிப்பு வழக்கு நடைபெற்று வருகின்றது.
கால தாமதம் செய்யாமல் வழக்கின் விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும்.எனவே வழக்கை தினமும் விசாரித்து முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பலமுறை அறிவுறுத்தி இருக்கிறது.
நான் இவ்வழக்கில் நீதிபதி யாக பொறுபேற்று இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இனியும் நீண்ட கால அவகாசம் எல்லாம் அளிக்க முடியாது. வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என்பதால், வருகின்ற 31-ஆம் தேதி அன்று அரசு வழக்குரைஞர் பவானி சிங் தனது பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். அன்றைய தினமே இம்மனு மீதான தீர்ப்பு வழங்கப்படும்' என்றார்.
பிப்ரவரி 3-ல் இறுதி வாதம்
தொடர்ந்து பேசிய நீதிபதி டி'குன்ஹா,'' சொத்துக்குவிப்பு வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் இறுதி வாதம் பிப்ரவரி 3-ம் தேதி முதல் ஆரம்பமாகிறது.
அன்றைய தினம் அரசு வழக்கறிஞர் பவானி சிங் தனது இறுதி வாதத்தை முன் வைக்க வேண்டும்' என கூறி வழக்கின் அடுத்த விசாரணையை வருகின்ற 31-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
சென்னையில் இருந்து பெங்களூர் கொண்டுவரப்பட்ட அசையும் சொத்துக்கள் தொடர்பான அத்தனை விவரங்களையும் பரிசு பொருள்களின் பட்டியலையும் தங்களுக்கு வழங்க வேண்டும் என ஜெயலலிதா தரப்பு கடந்த 20-ம் தேதி தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
அதனைத் தொடர்ந்து தற்போது புதிய மனுவை ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்துள்ளனர்.
1066 பொருள்கள், 144 நினைவு பரிசுகள்
சொத்துக்குவிப்பு வழக்கின் ஆரம்ப கட்ட விசாரணையின்போது ஜெயலலிதாவிடம் இருந்து தங்கம்,வைரம்,வெள்ளி உள்ளிட்ட நகைகள், பரிசுப் பொருள்கள்,கைகடிகாரங்கள், பட்டுப்புடவைகள்,காலணிகள், வாகனங்கள் என 1066 சான்று பொருள்களை தமிழக லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் கைப்பற்றினர். அப்போது ஜெயலலிதாவிற்கு அவரது கட்சியினர் பரிசளித்த 144 நினைவு பரிசு பொருட்களையும் பறிமுதல் செய்தனர். வெள்ளியால் ஆன அத்தனை பரிசுப்பொருள்களையும் ஜெயலலிதாவின் சொத்துக்களாக ஏற்க முடியாது என சிறப்பு நீதிமன்றம் கூறியதால் அவை சென்னை அரசு கருவூலத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன.