Last Updated : 18 Nov, 2014 04:38 PM

 

Published : 18 Nov 2014 04:38 PM
Last Updated : 18 Nov 2014 04:38 PM

போலீஸார் மீது துப்பாக்கி சூடு, குண்டு வீச்சு: ஹரியாணா ஆசிரமத்தில் மோதல்; 200-க்கும் மேற்பட்டோர் காயம்

கொலை வழக்கில் குற்றம்சாட்டப் பட்டுள்ள சாமியார் ராம்பாலை கைது செய்யவிடாமல் அவரது ஆதர வாளர்கள் தடுத்து வருகின்றனர்.

அவரை கைது செய்ய சென்ற போலீஸார் மீது சாமியாரின் ஆதரவாளர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு போலீ ஸாரும் துப்பாக்கிச்சூடு நடத் தினர். இருதரப்பு மோதலில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் காய மடைந்தனர்.

ஹரியாணா மாநிலம் பர்வா லாவில் சாமியார் ராம்பாலின் ஆசிரமம் உள்ளது. 2006-ம் ஆண்டில் ஆசிரமத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர் பாக ராம்பால் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் 43 முறை சம்மன் அனுப்பியும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதுதொடர்பாக பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதி மன்றம் தானாக முன்வந்து ராம் பால் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அவரை கைது செய்ய உயர் நீதிமன்றம் இரண்டு முறை பிடிவாரண்ட் பிறப் பித்தது. ஆனால் ராம்பாலின் ஆதர வாளர்கள் அவரை கைது செய்ய விடாமல் போலீஸாரை தடுத்தனர். இதனால் அதிருப்தி அடைந்த உயர் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் மீண்டும் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

ஹரியாணா மாநிலம் ஹிசார் அருகே பர்வாலாவில் 12 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆசிரமத்தில் ராம்பால் பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த ஆசிரமத்தின் முன்பு நேற்று நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர்.

அவர்கள் மீது ராம்பாலின் ஆதரவாளர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பெட்ரோல் குண்டு களையும் வீசினர். இதில் போலீஸ் தரப்பில் பலர் காயமடைந்தனர்.

சாமியாரின் ஆதரவாளர்கள் அத்துமீறியபோதும் பொறுமை காத்த போலீஸார் முதல்கட்டமாக ஆசிரம வளாகத்தில் மனித கேடயங்களாக நிறுத்தப்பட்டிருந்த 3000 பெண்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் ஆசிரம வளாகத் துக்குள் போலீஸார் முன்னேறிய போது இருதரப்புக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றது. சாமி யார் ஆதரவாளர்கள் துப்பாக் கிச்சூடு நடத்தி கற்களை வீசியெறிந் தனர். அதற்கு பதிலடியாக போலீ ஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி தடியடி நடத்தினர். ஆசிரம வளாகம் போர்க்களம்போல் காட்சியளிக்கிறது.

இதுகுறித்து போலீஸ் வட்டா ரங்கள் கூறியபோது, ‘போலீஸார், பத்திரிகையாளர்கள், பொது மக்கள், ராம்பாலின் ஆதரவாளர்கள் என 200-க்கும் மேற்பட் டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்க சம்பவ இடத்தில் 20 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப் பட்டுள்ளன’ என்று தெரிவித்தன.

ஆசிரம செய்தித் தொடர்பாளர் ராஜ் கபூர் கூறியபோது, சாமியார் ராம்பால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் ஆசிரமத்தில் இல்லை. வேறொரு இடத்தில் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

வரும் வெள்ளிக்கிழமைக்குள் ராம்பாலை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உயர் நீதி மன்றம் உத்தர விட்டுள்ளது. எனவே போலீ ஸார் அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

ராம்பால் யார்?

ஹரியாணா மாநிலம் சோனிபட் மாவட்டம் தானா கிராமத்தில் 1951 செப்டம்பர் 8-ல் ராம்பால் பிறந்தார். டிப்ளமோ என்ஜினீயரிங் படித்த அவர் ஹரியாணா மாநில நீர்ப்பாசனத் துறையில் 2000-ம் ஆண்டு மே மாதம் வரை பணியாற்றினார்.

அனுமாரின் தீவிர பக்தரான ராம்பால் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அவரை பூஜித்து வருகிறார். 1999-ல் சட்லக்கில் அவர் தனது முதல் ஆசிரமத்தை தொடங்கினார். பின்னர் ரோட்டக், பர்வாலா ஆகிய பகுதிகளிலும் ஆசிரமத்தை தொடங்கினார். பேஸ்புக், யு டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ராம்பால் அதிக ஆர்வம் கொண்டவர். யு டியூபில் அவரை ஆயிரக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர்.

சட்டத்துக்கும் ராம்பாலுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். 2000-ம் ஆண்டில் ஆர்ய சமாஜ் ஆதரவாளர்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த ராம்பால் பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டார்.

2006-ம் ஆண்டில் அவருடைய ஆசிரமத்தில் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார். அதில் சாமியார் ராம்பாலுக்கு நேரடி தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த வழக்கில்தான் ராம்பாலை கைது செய்ய போலீஸார் தேடுகின்றனர்.

2008-ம் ஆண்டு ஏப்ரலில் ரோட்டக் ஆசிரமத்தில் மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதேபோல் பர்வாலா ஆசிரமத்தில் 2013-ம் ஆண்டில் மிகப்பெரிய மோதல் வெடித்து 10 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதுபோல் சாமியார் ராம்பால் மீது மேலும் பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர் ஏற்கெனவே ஒருமுறை கைது செய்யப்பட்டு சிறிதுகாலம் சிறைவாசம் அனுபவித்தார். 2008 ஏப்ரலில் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அதன்பின்னர் அவரை போலீஸாரால் கைது செய்ய முடியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x