

பெங்களூரில் தன்பாலின உறவாளர் ஒருவர் இந்திய தண்டனைச் சட்டம் 377-ம் பிரிவின்கீழ் கைது செய்யப்பட்டதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை பெங்களூரைச் சேர்ந்த 32 வயதான மென் பொறியாளர் மீது அவரது மனைவி ஒரு புகார் அளித்தார். அதில் தனது கணவர் தன்பாலின உறவில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டிய அவர் அதற்கான வீடியோ ஆதாரத்தையும் போலீஸில் ஒப்படைத்தார். தனது கணவரின் படுக்கை அறையில் ரகசிய கேமரா பொருத்தி படம் பிடித்ததாக தெரிவித்தார். எனவே இந்திய தண்டனைச் சட்டம் 377-ம் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த விவகாரம் தன்பாலின உறவாளர்கள் மற்றும் திருநங் கைகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக் கிறது. இது தொடர்பாக ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் போலீஸாரையும், புகார் அளித்த மனைவியையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
கையெழுத்து இயக்கம்
பெங்களூரைச் சேர்ந்த விஜய் என்கிற தன்பாலின உறவாளர், மென்பொறியாளரை 377-ம் பிரிவின் கீழ் கைது செய்ததை கண்டித்து கையெழுத்து இயக் கத்தை தொடங்கியுள்ளார். இதில் 70-க்கும் மேற்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள், தன்பாலின உறவாளர்கள், திருநங்கைகள் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர். ஆயிரம் பேரிடம் கையெழுத்து வாங்கி, அதனை பிரதமர், குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு அனுப்பப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விஜய், ‘தி இந்து’விடம் பேசும்போது, “உலகில் மனிதராக பிறக்கும் ஒவ்வொருவரும் தனது விருப்பம் போல் வாழ உரிமை உள்ளது. மனைவிக்கு கணவரின் செயல்பாடு பிடிக்காவிடில் விவாகாரத்து செய்ய வேண்டியது தானே?
தன்னை ஏமாற்றியதாக அந்தப் பெண் கூறி இருக்கிறார். ஆனால் போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இது சட்டப்படி தவறு. பெங்களூரில் தினமும் பள்ளிச் சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களை கைது செய்யாமல் வேடிக்கைப் பார்க்கும் போலீஸார், இதில் மட்டும் இத்தனை வேகம் காட்டுவது ஏன்?” என கேள்வி எழுப்பினார்.
377-ஐ பயன்படுத்தலாமா?
பெங்களூரில் இயங்கி வரும் தன்பாலின உறவாளர்களுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் செயல் அதிகாரி வினய் சந்திரா கூறும்போது, “உலகில் பல நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட தன்பாலின உறவை இந்தியாவில் குற்றமாகக் கருதுவது வேதனையாக இருக்கிறது. சம்பந்தப்பட்டவர் குற்றவாளியா அல்லது குற்றமற்றவரா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும். ஆனால் 377-ம் பிரிவை தவறாக பயன்படுத்தி அவரை கைது செய்துள்ளனர். இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி ஓராண்டாகிறது. தனது கணவருக்கு தாம்பத்தியத்தில் விருப்பம் இல்லை என்பதை அறிந்த அந்தப் பெண் தேவைப்பட்டால் மருத்துவர்களையோ, பெற்றோ ரையோ கலந்து ஆலோசித்து இருக்கலாம். ஓராண்டு காலம் யாரிடமும் செல்லாமல் இருந்தது ஏன்?
அந்த நபரை 377-ம் பிரிவை பயன்படுத்தி கைது செய்திருப்பது பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. அந்தப் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக கைது செய்திருக்கலாமே? எனவே இந்த விவகாரம் குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்” என்றார்.
இதுதொடர்பாக பெங்களூர் மாநகர காவல் துறை துணை ஆணையர் சந்தீப் பாட்டீலிடம் விசாரித்த போது, “புகாரை பெற்றுக்கொண்டு எங்களுடைய கடமையை செய்தோம். இந்திய தண்டனைச் சட்டம் 377-ம் பிரிவை உருவாக்கிய நாடாளுமன்றமும், நீதிமன்றமும்தான் இது குறித்து பதில் அளிக்க வேண்டும். எங்களுக்கு கிடைத்த ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு அவரை கைது செய்திருக்கிறோம்” என்றார்.