Published : 03 Nov 2014 11:56 AM
Last Updated : 03 Nov 2014 11:56 AM

பெரு நகரங்களில் வாடகை வீடு: ரூ.6,000 கோடியில் அரசு திட்டம்

பெருநகரங்களுக்கு வேலை தேடி இடம் பெயர்பவர்கள் மற்றும் பெரு நகரங்களில் வீடு இல்லாதவர்களின் தேவையை நிறைவு செய்யும் விதத்தில் ரூ.6,000 கோடி மதிப்பில் வாடகை வீடு திட்டத்தை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சக உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

பெரு நகரங்களில் ரூ. 6,000 கோடி மதிப்பில் குடியிருப்புகளைக் கட்டி, அவற்றை வேலை தேடி இடம்பெயர்பவர்கள், வீடு இல்லாதவர்களின் குடியிருப்புத் தேவையை தற்காலிகமாகப் பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பெருநகரங்களுக்கு வேலை தேடி இடம்பெயர்பவர்களுக்கு தங்குமிடம் மிகப்பெரும் பிரச்சினையாக உள்ளது. அவ்வாறு இடம்பெயர்பவர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ளனர். தங்களுக்கு ஏற்ற தங்குமிடத்தைத் தேர்வு செய்வது அவர்களுக்குச் சிரமமாக உள்ளது.

முதல்கட்டமாக டெல்லியில் குடியிருப்பு அமைக்கப்படும். பின்னர் மற்ற பெருநகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும். குறுகிய கால அவகாசத்துக்கு இந்த வீடுகள், வேலை தேடி இடம்பெயர்ந்தவர்களுக்கும், வீடு இல்லாதவர்களுக்கும் வாடகைக்கு விடப்படும். அவர்கள் வேறு வீடுகளுக்கு மாறும் வரை அந்த வீட்டில் வசிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 2012-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 1.88 கோடி பேருக்கு வீடு இல்லை. இதில் 95 சதவீதம் பேர் குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள்.

படேல் திட்டம்

இது தவிர, நகர்ப்புறங்களில் குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்கள், பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியிருப்பவர்கள், குறைந்த வருமானம் உடையவர்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டமான சர்தார் படேல் தேசிய நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 10 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டி, 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற இலக்கை அடைய மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்துக்கு ரூ. 22.50 லட்சம் கோடி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x