Last Updated : 22 Mar, 2017 07:59 AM

 

Published : 22 Mar 2017 07:59 AM
Last Updated : 22 Mar 2017 07:59 AM

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா இறந்துவிட்டாலும் ரூ.100 கோடி அபராதத்தை வசூலிக்க வேண்டும்: கர்நாடக அரசு சீராய்வு மனு தாக்கல்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப் பட்ட‌ ஜெயலலிதா மறைந்தாலும், அவருக்கு சொந்தமான சொத்துக்களைக் கொண்டு ரூ.100 கோடி அபராதத் தொகையை வசூலிக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

கர்நாடக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி தீர்ப்பு அளித்தது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பின்படியே நால்வரையும் குற்றவாளி என அறிவித்து, அபராதத் தொகையையும் உறுதி செய்தது. முதல் குற்றவாளியான ஜெயலலிதா மறைந்துவிட்டதால், அவர் மீதான வழக்கு கைவிடப்படுவதாக தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது.

முதல் குற்றவாளியான ஜெயலலிதா இவ்வழக்கின் அனைத்து விசாரணையும் நிறைவடைந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் கடந்த‌ டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். குற்றவியல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர் வழக்கு விசாரணையின்போது இறந்திருந்தால் மட்டுமே அவரது பெயரை வழக்கில் இருந்து விடுவிக்க முடியும். ஆனால், ஜெயலலிதா வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இறந்ததால் அவரது பெயரை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது. இதை உச்ச நீதிமன்ற விதிமுறைகள் - 2013 மற்றும் அரசமைப்பு சட்டம் உறுதி செய்கிறது.

ஜெயலலிதா இறந்துவிட்ட நிலையில் அவருக்கு தண்டனை நிறைவேற்ற இயலாது. அதே நேரம் பொது ஊழியரான அவர் வருமானத்துக்கு அதிகமாக குவித்த சொத்துக்களைக் கொண்டு அபராதத் தொகையை வசூலிக்க முடியும்.

எனவே, சொத்துக்குவிப்பு வழக்கின் முதல் குற்றவாளியான‌ ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட சொத்துக்களை ஏலம் விட்டு ரூ.100 கோடி அபராதத்தை வசூலிக்க வேண்டும். இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் அபராத தொகை வசூலிப்பது தொடர்பான தெளிவான விளக்கத்தையும் வழங்க வேண்டும். நீதிபதி குன்ஹா தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத்தை வசூலிக்க வேண்டும். இவ்வாறு க‌ர்நாடக அரசின் மனுவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x