

காவிரிப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே இதனை எதிர்த்து பந்த், போராட்டம் ஆகியவற்றை அனுமதிப்பது ஏன் என்று கர்நாடக, தமிழக அரசுகளை உச்ச நீதிமன்றம் விமர்சித்துள்ளது. தமிழக, கர்நாடக அரசுகள் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் வலியுறுத்தினர்.
தமிழகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிவக்குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் செய்திருந்த மனுவில், கர்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டதையடுத்து கர்நாடகாவில் பெரும் வன்முறைகள் வெடித்தது, தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது, எனவே உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டு இரு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, “கர்நாடக, தமிழக மாநில அரசுகள் சட்டத்திற்குண்டான மதிப்பை காப்பாற்றுவது அவசியம். உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பிறகே பந்த், போராட்டங்கள் கூடாது என்று நாங்கள் அறிவுறுத்தியிருந்தோம். எங்கள் உத்தரவுக்கு ஒத்துழைக்க வேண்டும். இதனை உங்கள் அரசுகளுக்கு இன்றே தெரிவியுங்கள்” என்று தமிழக, கர்நாடக வழக்கறிஞர்கள் குழுவிடம் தெரிவித்தனர்.
நீதிபதிகள் மேலும் இது தொடர்பாகக் கூறும்போது, “எந்த வித போராட்டத்தின் காரணமாகவும் உடைமைக்கும் உயிருக்கும் சேதம் விளைவித்தல் கூடாது என்பதை இரு மாநில அரசுகளின் கடமை என்பதை நாங்கள் வலியுறுத்திக் கூற கடமைப்பட்டுள்ளோம்.
மக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்ள ஒருக்காலும் அனுமதிக்கக் கூடாது. எனவே இத்தகைய நிலைமைகள் உருவாகமல் தடுப்பது தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகளின் கடமையாகும்” என்று கூறி பிற காவிரி பிரச்சினை தொடர்பான வழக்குகளுடன் இதனையும் விசாரிக்கும் வகையில் செப்டம்பர் 20-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.
“இரு மாநிலங்களிலும் அமைதி நிலவ வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் அதிகாரிகளும் உறுதி செய்து சட்டத்தின் மதிப்பு காப்பாற்றப்பட வேண்டும்” என்று நீதிபதிகள் வலியுறுத்தினர்.