

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஒருபாலுறவு என்பது தனி மனித சுதந்திரம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒருபாலுறவு சட்டவிரோதமல்ல என்று கூறும் டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பையே அவர் சரி என்று கூறுகிறார்.
ஒருபாலுறிவில் ஈடுபடுவது குற்றச் செயல் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "இந்த விஷயம், தனிப்பட்ட நபர்களைச் சார்ந்ததாகவே கருதுகிறேன். டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்புடன்தான் உடன்படுகிறேன்" என்றார் ராகுல் காந்தி.
முன்னதாக, ஒருபாலுறவு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தனக்கு ஏமாற்றத்தை அளித்ததாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியிருந்தார்.
நாம் வாழ்வது 2013-ல் என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உணரவில்லை போலும் என்பதாக, அந்தத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து கூறினார்.
அதேபோல், ஓரினச் சேர்க்கை சட்டவிரோதமானது அல்ல என அறிவிக்க, அனைத்து சாத்தியக் கூறுகளையும் மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், மத்திய அரசின் நிலைப்பாட்டைத் தெரிந்துகொண்டே பிறகே இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க முடியும் என்று பாஜக மறுத்து வருவதும் கவனத்துக்குரியது.