

பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில உயர் நீதிமன்ற முன்னாள் பெண் நீதிபதி நிர்மல் யாதவ் மீது ஊழல் குற்றச்சாட்டை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று பதிவு செய்தது.
2008-ம் ஆண்டு ஒரு வழக்கு விசாரணையின்போது அவர் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக தன்மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டுமென்று நிர்மல் யாதவ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு கடந்த 3-ம் தேதி நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் மீதான வழக்கை விசாரித்த சண்டீகர் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி விமல் குமார், ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் முன்னாள் நீதிபதி நிர்மல் யாதவ் மீது குற்றச்சாட்டை பதிவு செய்தார்.
இதே வழக்கு தொடர்பாக மேலும் இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையின் போது வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்களிடம் பேச நிர்மல் குமார் மறுத்துவிட்டார்.
டெல்லியைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் ரவீந்திர சிங், முன்னாள் கூடுதல் அட்வகேட் ஜெனரல் சஞ்சய் பன்சால், சண்டீகரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜீவ் குப்தா உள்ளிட்டோர் மீதும் இதே வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2008-ம் ஆண்டில் உயர் நீதிமன்ற நீதிபதியாக நிர்மல்ஜித் கௌர் இருந்தபோது அவரது வீட்டுக்கு ரூ.15 லட்சம் ரொக்கம் அனுப்பிவைக்கப்பட்டது.
இது பெண் நீதிபதி நிர்மல் யாதவுக்கு வழங்கப்பட்ட லஞ்சம் என்பது குற்றச்சாட்டு. லஞ்சப் பணம் தவறுதலாக நிர்மல்ஜித் கௌர் வீட்டுக்கு வந்ததால் இந்த லஞ்ச விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.