

ஜே.என்.யூ. பல்கலைக்கழக மாண வர் சங்கத் தலைவர் கண்ணய்யா டெல்லி திஹார் சிறையில் இருந்து நேற்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த பிப்ரவரி 9-ம் தேதி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தேச விரோத கோஷங்களை எழுப்பியதாக மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமார் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக தேசத்துரோக வழக்கில் கடந்த 12-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி பிரதிபா ராணி நேற்றுமுன்தினம் அவருக்கு 6 மாத இடைக்கால ஜாமீன் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கண்ணையா நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டார்.
டெல்லி பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் அவர் மீது ஏற்கெனவே தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால் திஹார் சிறையில் இருந்து ரகசியமாக வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் சிறை நுழைவுவாயிலில் காத்திருந்த நிருபர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஆட்சியர் அறிக்கை
முன்னதாக ஜே.என்.யூ. விவகாரம் தொடர்பாக டெல்லி மாவட்ட ஆட்சியர் சஞ்சய் குமார் நேற்று முன்தினம் மாலை மாநில அரசிடம் ஓர் அறிக்கை தாக்கல் செய்தார். அதன் விவரங்களை அவர் வெளியிடவில்லை. என்றாலும் அறிக்கை விவரங்கள் அறிந்த, பெயர் கூற விரும்பாத அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஜேஎன்யூ வளாகத்தில் தேசவிரோத முழக்கங்கள் எழுப்பப்பட்டது உண்மை. அதில் எந்த சந்தேகமும் இல்லை. என்றாலும் இவ்வாறு முழக்கம் எழுப்பப்பட்டதில் கண்ணய்யாவுக்கு எவ்வித தொடர்பையும் கண்டறிய முடியவில்லை என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான 7 வீடியோக்கள் தடயவியல் ஆய்வுக்காக ஹைதராபாத் அனுப்பி வைக்கப்பட்டது. இவற்றில் 3 வீடியோக்கள் ‘எடிட்’ செய்யப்பட்டு குரல் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது” என்றார்.
டெல்லி காவல் துறை சுற்றறிக்கை
இதனிடையே கண்ணய்யா குமாருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் 6 மாதங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. தேவைப்படும்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியின் அனைத்து மாவட்ட காவல் துறை மற்றும் போக்குவரத்து போலீஸாருக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மாநில காவல் துறை அனுப்பியுள்ள அந்த சுற்றறிக்கையில், “விடுதலைக்கு பின் கண்ணய்யா தனது ஆதரவாளர்களுடன் ஜந்தர் மந்தர், ஜேஎன்யூ, டெல்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லக் கூடும். இதை ஏபிவிபி மற்றும் பிற வலதுசாரி அமைப்புகள் எதிர்க்க கூடும் என்பதால் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மகளிர் போலீஸாருடன் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவேண்டும். மிகுந்த விழிப்புடன் பணியாற்ற வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.