காஷ்மீர் மக்களை கைவிட மாட்டேன்: முதல்வர் மெஹ்பூபா உருக்கம்

காஷ்மீர் மக்களை கைவிட மாட்டேன்: முதல்வர் மெஹ்பூபா உருக்கம்
Updated on
1 min read

காஷ்மீரில் கலவரத்திற்குப் பிறகு ஓரளவுக்கு அமைதி திரும்பியதையடுத்து முதல்வர் மெஹ்பூபா முப்தி நடந்த சம்பவங்களுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.

புர்ஹான் வானி என்கவுண்டரில் கொல்லப்பட்டதையடுத்து வெடித்த வன்முறைக்கு 34 பேர் பலியாகியுள்ளனர். 4 நாட்கள் கடும் வன்முறை மூண்டதையடுத்து இன்று சற்றே அமைதி திரும்பியுள்ளது.

ஆனாலும் பாம்போர், குப்வாரா உள்ளிட்ட சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இன்று சில இடங்களில் ஆங்காங்கே கல்லெறி சம்பவங்கள் தவிர பெரிய வன்முறை எதுவும் நிகழவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

குத்வானி, குல்காம், இமான் சாஹிப், ஷோபியான், தெற்கு காஷ்மீர் காக்போரா, கிரல்போரா, குப்வாரா, டிரெகாம், லான்கேட், லால்புரா, புட்கா சோபோர், மெயின் சவுக் சோபோர் ஆகிய இடங்களில் ஆங்காங்கே கல்லெறி சம்பவம் நடந்துள்ளன.

காஷ்மீரை வன்முறை மற்றும் ரத்த சம்பவங்களிலிருந்து மீட்க மக்கள் ஆதரவைக் கோரினார் முதல்வர் மெஹ்பூபா முப்தி. அரசியல் ரீதியாக விடுதலை பெறுவதற்கும், பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடைவதற்கும் சமூக ரீதியாக பாதுகாப்பு எய்துவதற்கும் மக்கள் ஆதரவு வேண்டும் என்று மெஹ்பூபா முப்தி மக்களை வேண்டிக் கேட்டுக் கொண்டார்.

“27 ஆண்டுகால வன்முறை ஒவ்வொரு இல்லத்திலும் ஆழமான காயத்தினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரத்தம் சிந்தாமல் தடுத்து நம் மக்களை நாம்தான் காப்பாற்ற வேண்டும், அதற்கு அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

கடந்த 4 நாட்களாக நடைபெற்று வரும் வன்முறை, உயிரிழப்புகள் என் மனதில் ஆழ்ந்த வருத்தத்தையும் துயரத்தையும் ஏற்படுத்துகிறது. சவாலான ஒரு பணியை ஏற்றுக் கொண்டிருந்தாலும் நான் மக்களை கைவிட மாட்டேன். என் அரசின் உடனடி செயல்பாடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும் செயல்பாடாகவே இருக்கும். நீண்டகால அடிப்படையில் மாநிலத்தில் அமைதியும் சமாதானமும் ஏற்படுவதற்கான நடவடிக்கைகளை அறிமுகம் செய்வதே எனது பணி. இதற்காக மாநில இளைஞர்கள் நலனில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

மாநில வரலாற்றின் ஒவ்வொரு காலக்கட்டமும் சவால்கள் நிரம்பியதாகவே இருந்துள்ளது. இப்போது நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் கடந்த காலத்தில் நாம் எதிர்கொண்ட பிரச்சினைகளுக்கு நிகரானதே.

1931-ம் ஆண்டு தியாகிகளுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி என்னவாக இருக்க வேண்டுமெனில் அமைதியை மீட்டெடுப்பதாகவே இருக்க முடியும். இங்கு அமைதியைக் குலைக்கும் சக்திகளுக்கு நாம் இரையாகிவிடக்கூடாது” என்றார் முதல்வர் மெஹ்பூபா முப்தி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in