Published : 11 Dec 2013 01:01 PM
Last Updated : 11 Dec 2013 01:01 PM

வாழ்வுரிமையை பறிக்கும் தீர்ப்பு: ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்கள்

ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது என ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்களும், செயற்பாட்டாளர்களும் தெரிவித்துள்ளனர்.

ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாயா அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து, 'நாஸ்' தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மூத்த வழக்குரைஞர் ஆனந்த் கிரோவர் கூறுகையில்: "இது சட்ட ரீதியாக சரியான தீர்ப்பு அல்ல. தீர்ப்பை மறுசீராய்வு செய்ய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.

தீர்ப்பு வழங்கப்பட்ட போது நீதிமன்றத்திற்கு வெளியே குழுமி இருந்த ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்கள், தீர்ப்பு தங்கள் வாழ்வுரிமையை பறிக்கும் வகையில் உள்ளதாக தெரிவித்தனர்.

மீண்டும் இருட்டறை: உச்ச நீதிமன்ற தீர்ப்பு தங்களை மீண்டும் ஒரு இருட்டறையில் தள்ளுவதாக இருக்கிறது என ஓரினச் சேர்க்கை செயற்பாட்டாளர் பல்லவ் பட்னாகர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் தினம் கொண்டாடப்பட்ட மறு தினமே இப்படி ஒரு தீர்ப்பு வெளியாகியிருப்பது ஒரு மோசமான பிரதிபலிப்பாக இருக்கிறது, எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.

மற்றொரு ஓரினச் சேர்க்கை செயற்பாட்டாளர் ஷோவினி கோஷ் கூறுகையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. ஒரு மதச் சார்பற்ற நாட்டில் எழும் பிரச்சினையின் மீது மத அமைப்புகள் எப்படி ஆளுமை செலுத்த முடியும்? இதை நீதிமன்றத்தில் எழுப்புவேன். பாபர் மசூதி இடிப்பு போன்ற குற்றச் செயல்கள் மதத்தின் பேரிலேயே செய்யப்பட்டன என்றார்.

டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து இப்பிரச்சினையில் தங்களுக்கு 'நல்ல வழிகாட்டுதல்' கிடைத்து விட்டதாக கருத்து தெரிவித்த மத்திய அரசு இப்போது அப்படியே மாற்றுக் கருத்து தெரிவிக்க காரணம் என்ன என்பதையும் கண்டறிவோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x