

ஜி-20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் ஆஸ்திரேலியா செல்லவிருக்கும் நிலையில், அவரிடம் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் நேற்று தொலைபேசி மூலம் பேசினார். குரூப்-20 (ஜி-20) என்று அழைக்கப்படும் வளரும் நாடுகள் மாநாடு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இம்மாதம் நடைபெறுகிறது.
இதில் நிதியமைச்சர்கள் மாநாடு நவம்பர் 13 முதல் 15 வரையிலும், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாடு நவம்பர் 15, 16 ஆகிய தேதிகளிலும் நடை பெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ள மோடி, தனது மியான்மர் பயணத்தை முடித்து க்கொண்டு அங்கிருந்து வரும் 14-ம் தேதி ஆஸ்திரேலியா செல்கிறார். ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதுடன் ஆஸ்திரேலியாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் மோடி பங்கேற்கிறார்.
இந்நிலையில் இந்த மாநாடு மற்றும் இருதரப்பு பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நிரல் தொடர்பாக பிரதமர் மோடியுடன் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் நேற்று தொலைபேசி மூலம் பேசினார்.
மோடியின் பயணத்தை தானும் ஆஸ்திரேலிய மக்களும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்த அபோட், இந்தப் பயணத்தின் மூலம் இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான உறவுகள் மேலும் வலுப்பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
உலகப் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை பெருக்குவது தொடர்பாக, இந்திய அனுபவங்களின் அடிப்படையில் தொலைநோக்குத் திட்டங்களை பகிர்ந்துகொள்ளுமாறும் டோனி அபோட் கேட்டுக்கொண்டார். மோடி தனது தரப்பில், மெல்போர்ன் கிரிக்கெட் மைதா னத்தில் தனக்காக ஏற்பாடு செய்யப் பட்டுள்ள சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சிக்கு நன்றி தெரிவித்தார்.