சட்ட விரோத சொத்துகளை மறைக்க போயஸ் தோட்டத்தில் ஜெ.-சசி கூட்டுச்சதி: உச்ச நீதிமன்ற தீர்ப்பில் விவரிப்பு

சட்ட விரோத சொத்துகளை மறைக்க போயஸ் தோட்டத்தில் ஜெ.-சசி கூட்டுச்சதி: உச்ச நீதிமன்ற தீர்ப்பில் விவரிப்பு
Updated on
2 min read

பெரிய அளவில் சட்ட விரோதமாக சொத்துகளை குவிக்கவும், அவற்றை பல்வேறு விதமாக சட்டபூர்வமாக்குவதிலும் போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் கிரிமினல் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

அதாவது, “ஆழமான சதித்திட்டம்’ இருந்ததாக ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விவரங்கள் தங்களுக்கு எடுத்துரைப்பதாக இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

போயஸ் தோட்ட இல்லத்தில் சசிகலாவுக்கு ‘மனிதர்களை நேசிக்கும் கொடைப்பண்பு’ காரணமாக ஜெயலலிதா இடம் கொடுக்கவில்லை. மாறாக இவர்களது குற்ற நடவடிக்கைகளிலிருந்து காத்துக் கொள்ளவே சசிகலாவை போயஸ் தோட்ட இல்லத்தில் இடம்கொடுத்து வைத்திருந்தார் ஜெயலலிதா என்று தீர்ப்பில் இருவர் மீதும் கடுமையாக சாடப்பட்டுள்ளது.

“சாட்சியங்களை ஆராய்ந்து பார்த்ததில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சதியில் ஈடுபட்டதான முடிவுக்கு நாங்கள் வருகிறோம், சம்பந்தப்பட்ட இந்த காலக்கட்டத்தில் ஏ1, அதாவது ஜெயலலிதா ஆட்சியில் இருந்துள்ளார். அப்போது தன் வருவாய் ஆதாரங்களையும் மீறி அளவுக்கதிகமாக சொத்து சேர்த்தார் (1991-96). இதனை சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் சில நிறுவனங்களுக்கும் இது அளிக்கப்பட்டுள்ளது மாற்றுப் பெயர்களில்” என்று நீதிபதிகள் பினகி சந்திர கோஸ் மற்றும் அமிதவ ராய் அடங்கிய அமர்வு முடிவுகட்டியது.

மேலும் 1991-ல் குற்றம்சாட்டப்பட்டோரின் சொத்துகள் மதிப்பு ரூ.2.01 கோடி. 1996-ல் குற்றம்சாட்டப்பட்டோரின் சொத்து மதிப்பு ரூ.66.44 கோடியாக பல்கிப்பெருகியது.

“இதனையொட்டிய உண்மைகள் மற்றும் சூழ்நிலைகள் நமக்கு அறிவுறுத்துவதெல்லாம், பெரிய அளவில் சொத்துகளைக் குவித்து அவற்றை செயல்படாத பல நிறுவனங்கள் மூலம் மறைத்து சட்ட விரோத சொத்துக் குவிப்பை சட்டத்தின் கண்களில் மண்ணைத்தூவி மேற்கொண்டுள்ளனர்” என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் நீதிபதி ராய், ஊழல் நடைபெற்ற விதம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளதாக தெரிவித்தார்.

கிரிமினல் சதி என்பதற்கு உச்ச நீதிமன்றம் 4 குற்றவாளிகள் மீதும் முறையான காரணங்களைக் கூறியுள்ளது.

ஒன்று, ஜெயா பப்ளிகேஷன் சார்பாக ஜெயலலிதா, சசிகலாவுக்கு பவர் ஆஃப் அட்டார்னி வழங்கியுள்ளார். சொத்துகள் குவிப்புக்கு பயன்படும் பணப்புழக்கம் மற்றும் பணம் கையாளுதலிலிருந்து ஜெயலலிதா தன்னை தொலைவுபடுத்திக் கொள்ள அவர் இவ்வாறு சசிகலாவுக்குக் பவர் ஆஃப் அட்டார்னி வழங்கினார் என்கிறது உச்ச நீதிமன்றம்.

ஜெயா பப்ளிகேஷன் கணக்குகளில் செலுத்தப்படும் தொகைகளை சசிகலாவே நிர்வகிப்பார் என்று ஜெயலலிதாவுக்கு முழுதாக, நன்றாகவே தெரியும்.

இரண்டாவது செயல்படா நிறுவனங்களை அவ்வளவு வேகமாக உருவாக்கிய விதம் என்பது சதி நடைபெற்றதற்கான அடுத்த சாட்சியமாகும்.

“ஒரே நாளில் 10 நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று சாட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா, இளவரசி ஆகியோர் சொத்துகளை வாங்குவதோடு தனியான நிறுவனங்களைத் தொடங்கினர். இதைத்தவிர எந்த ஒரு வர்த்தக நடவடிக்கைகளையும் இவர்கள் கவனிக்கவில்லை” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த செயல்படா நிறுவனங்கள் நமது எம்ஜிஆர், ஜெயா பப்ளிகேஷன் ஆகியவற்றின் நீட்சிகளே. இவர்கள் செய்த ஒரே வர்த்தகம் சொத்துகளை வாங்கிக் குவிப்பதே.

மேலும் போயஸ் தோட்டத்தில் அனைவரும் இருந்து கொண்டிருக்கும் போது சசிகலா உள்ளிட்டோர் செய்த வேலைகள் தனக்கு தெரியாது என்று ஜெயலலிதா கூறுவதினாலும் எந்த ஒரு பயனுமில்லை.

“எந்த வித ரத்த உறவுமில்லாமல் ஜெயலலிதா இவர்களுடன் போயஸ் தோட்ட இல்லத்தில் வசித்து வந்தார்” என்று தீர்ப்பில் நீதிபதி கோஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

“ஏ1 (ஜெயலலிதா) கொடுத்த நிதிகளில் நிறுவனங்களின் உருவாக்கம், பெரிய அளவில் நிலங்களை வாங்கியது ஆகியவை, குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் போயஸ் தோட்டத்தில் ஏதோ சமூக வாழ்க்கையை வாழ்ந்து விடவில்லை என்பதையும் மனிதார்த்த நோக்கங்களுக்காக ஜெயலலிதா இவர்களுக்கு இலவசமாக போயஸ் தோட்டத்தில் இடமளிக்கவில்லை என்பதையும் குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் ஒரே இடத்தில் இருந்து கொண்டுதான் சட்ட விரோத சொத்துகளை வாங்கி அதை சட்டப்பூர்வமாக சதித்திட்டம் தீட்டியுள்ளானர் என்பதையும் சாட்சியங்க்கள் நிரூபித்துள்ளன.

இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா மேற்கொண்ட விசாரணை நடைமுறை பெரிய அளவிலான ஆராய்தல் ஆகியவற்றுக்காக அவரை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. ஆனால் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி கையிலிருக்கும் ஆதாரங்களைக் கூட கவனிக்க மறுத்து விட்டது. குற்றம்சாட்டப்பட்டோருக்கு ஆதரவாக வருமான வரி அதிகாரிகளின் நிலைப்பாட்டை கேள்வியின்றி ஏற்றுக் கொண்டுள்ளது.

விசாரணை நீதிமன்றம் உணர்வுபூர்வமாக, கண்காணிப்பு பூர்வமாக, நீதிபூர்வமாக சாட்சியங்களை அணுகியுள்ளது. ரூ.32 லட்சத்திற்கு புடவைகள் வாங்கியதாக அரசு தரப்பு அழுத்தம் கொடுத்ததை நீதிபதி குன்ஹா ஒதுக்கித்தள்ளினார் மேலும் அரசு தரப்பு ஆட்சேபணைகளுக்கிடையே தங்கம் மற்றும் வைர இருப்புகளூக்கான மதிப்பு ரூ.2 கோடியாகக் குறைக்கப்பட்டது. சுதாகரன் திருமண செலவுகளை 50% குறைத்தது. மேலும் கட்டுமானங்கள் மதிப்பீட்டையும் 20% குறைத்தது விசாரணை நீதிமன்றம். எனவே நீதிபதி குன்ஹா மிகவும் நியாயமாகவே செயல்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் கூறியுள்ளது.

இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம் பிரதம குற்றவாளி மரணமடைந்த பிறகு சசிகலா உள்ளிட்டோரை தண்டிக்க முடியுமா என்ற சட்டரீதியான கேள்விக்கு, உச்ச நீதிமன்றம் 2014-ல் தனது சிபிஐ-ஜிதேந்தர் குமார் வழக்கை மேற்கோள் காட்டி மற்றவர்களை ஊழல் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்க முடியாது என்றது.

மேலும் 2-வது ஆட்சேபணையாக அரசுசார் ஊழலில் தனிப்பட்ட நபர்களான சசிகலா உள்ளிட்டோரை தணடிக்க முடியுமா என்ற கேள்விக்கு குன்ஹா தீர்ப்பையே முடிவாகக் காட்டியது, “விசாரணை நீதிமன்றம் மிகச்சரியாகவே தனிப்பட்ட நபர்கள் இதில் குற்றவாளிகளாக கருத இடமுண்டு என்று முடிவுக்கு வந்தது” என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறி குன்ஹா தீர்ப்பை செல்லும் என்று அறிவித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in