

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் அளித்த பதில் விவரம்:
20 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் காலி - மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்:
உயர் கல்வி நிறுவனங்களில் காலிப் பணியிடங்கள் முக்கிய பிரச்சினை யாக உள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் 20 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆசிரியர் பணியை ஏற்க மாணவர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் தகுதியானவர்களுக்கு பற்றாக்குறை இருப்பதே இதற்குக் காரணம்.
பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க புது விதிமுறை:
பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரிப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. சுமார் 20 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படவில்லை என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண, புதிய விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளர்கள் கழிவுகளைச் சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் அவை மறுசுழற்சி செய்யப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது குறையும்.
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அவைக்கு வராததால் அவர் சார்பில் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியது:
கிராமப்புற இளைஞர் தன்னார்வலர் படை
காங்கிரஸ் எம்பி பிரதாப் சிங் பஜ்வா மாநிலங்களவையில் பேசியதாவது:
பஞ்சாபில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் (44) தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக இவ்வழியாக ஊடுருவிய தீவிரவாதிகள்தான் பதான்கோட் விமானப்படை தளத்தின் மீது தாக்குதல் நடத்தினர். எனவே, இதுபோன்ற தீவிரவாத செயல்களைத் தடுப்பதற்காக, எல்லையோர கிராமப்புற இளைஞர்கள் அடங்கிய தன்னார்வலர் படையை உருவாக்கி பயிற்சி அளிக்க வேண்டும். இவர்களைக் கொண்டு பாதுகாப்புப் படையினருக்கு அடுத்தபடியாக எல்லையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் 2-வது பாதுகாப்பு வளையத்தை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரயில்வே நிதி ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்
2017-18 நிதியாண்டுக்கான ரயில்வே நிதி ஒதுக்கீடு மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இதன்படி, இத்துறைக்கு ரூ.1.31 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டின் ரூ.1.21 லட்சம் கோடியைவிட 8 சதவீதம் அதிகம். மேலும் 2016-17 நிதியாண்டுக்கான துணை மானிய கோரிக்கை மற்றும் 2013-14 நிதியாண்டுக்கான கூடுதல் மானிய கோரிக்கை ஆகியவையும் மக்களவையில் நிறைவேறின. கடந்த 1924-க்கு பிறகு முதல்முறையாக ரயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது. இதன்படி, ரயில்வே நிதி ஒதுக்கீட்டை உள்ளடக்கிய அடுத்த நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.