Published : 06 Jan 2014 12:00 AM
Last Updated : 06 Jan 2014 12:00 AM

நாளிதழ்கள் நம்பகத்தன்மை மிக்கவை - பிரதமர் மன்மோகன் சிங் புகழாரம்

இன்றைய இணையதள உலகில் நாளிதழ்கள் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளன. அதற்கு காரணம் நாளிதழ்களின் நம்பகத்தன்மையும் விரிவான செய்திகளுமே ஆகும் என்று பிரதமர் மன்மோகன் சிங் புகழாரம் சூட்டினார்.

மாத்ருபூமி நாளிதழின் 90-வது ஆண்டு விழா கொச்சியில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் பேசியதாவது:

1934 ஜனவரியில் காந்தியடிகள் கேரளம் வந்தபோது மாத்ருபூமி அலுவலகத்துக்கு வந்துள்ளார். காந்தியடிகளின் பல்வேறு கட்டுரைகள், பேச்சுகள் இந்த நாளிதழில் வெளிவந்துள்ளன. நாட்டின் முதல் பிரதமர் நேருவுக்கும் மாத்ருபூமி நாளிதழுக்கும் நெருங்கிய உறவு உண்டு.

இன்றைய உலகில் இணையத்தின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது. அதில் சமூக வலைத்தளங்கள் முன்னிலை வகிக்கின்றன. இருப்பினும் நமது நாட்டில் இன்றளவும் நாளிதழ்களே மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்குகின்றன. அதற்கு உதாரணமாக மலையாள நாளிதழ்களைக் குறிப்பிடலாம். நம்பகத்தன்மை, விரிவான, தெளிவான செய்திகளால் நாளிதழ்கள் தனக்கென ஓரிடத்தைப் பெற்றுள்ளன என்றார்.

இந்த விழாவில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி, மத்திய அமைச்சர்கள் கே.வி. தாமஸ், கே.சி.வேணுகோபால், மாநில அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா, நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x