

குஜராத் மாநிலம் ஜுனாகத் நகரில் கடந்த 25 ஆண்டுகளாக தெருவோரம் காலணி தைக்கும் தொழில் செய்து வருபவர் மன்சுக் மக்வானா (55). இவர் ‘ஜன் தன்’ திட்டத்தின் கீழ் பாங்க் ஆப் பரோடா வங்கியில் கணக்கு வைத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வருமான வரித் துறை இவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், “பண மதிப்பு நீக்க காலத்தில் உங்களது வங்கிக் கணக்கில் ரூ.10 லட்சம் முதலீடு செய்யப் பட்டிருப்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. இதை அறிந்த அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும் போது, “நான் தினமும் ரூ.200 தான் சம்பாதிக்கிறேன். அப்படி இருக்கும்போது, இவ்வளவு பணத்தை நான் எப்படி வங்கியில் டெபாசிட் செய்திருக்க முடியும். வருமான வரித் துறையின் நோட்டீஸை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்” என்றார்.
இதனிடையே, ஜுனாகத் தொகுதியின் பாஜக எம்எல்ஏ மகேந்திர மஷ்ரு கூறும்போது, “மக்வானாவை நேரில் சந்தித்துப் பேசினேன். அப்போது அவருக்கு வருமான வரித் துறை அனுப்பி உள்ள நோட்டீஸை பார்த்தேன். ஆனால், அவரது வங்கிக் கணக் கில் அதிக தொகை டெபாசிட் செய்யப்படவில்லை. தொழில் நுட்பக் கோளாறால் இந்தத் தவறு நடந்திருக்கலாம். எனினும், வருமான வரித் துறை அலுவலகத் துக்கு அழைத்துச் செல்வதாக அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் தானே செல்வதாகவும் உதவி தேவைப்பட்டால் கூப் பிடுவதாகவும் தெரிவித்தார்” என்று தெரிவித்துள்ளார்.