

இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ நிலைகள், பதுங்குகுழிகள் அழிக்கப்பட்ட நிகழ்வை மத்திய அரசு ஆதரிப்பத்தாக பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருக்கிறார்.
காஷ்மீரின் ரஜோரி எல்லையில் இருந்து பாகிஸ்தான் ராணுவ நிலைகளை குறிவைத்து இந்திய ராணுவ வீரர்கள் அண்மையில் தாக்குதல் நடத்தினர். இதில் பாகிஸ்தானின் பல்வேறு ராணுவ நிலைகள், பதுங்குக் குழிகள் தரைமட்டமாக்கப்பட்டன. கடந்த 9-ம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பாக். ராணுவ நிலைகளை இந்திய ராணுவம் தாக்கும் வீடியோ காட்சியும் வெளியானது.
இந்நிலையில் இது குறித்து அருண் ஜேட்லி தனது ட்விட்டர் பக்கத்தில், "எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ நிலைகள், பதுங்கு குழிகள் அழிக்கப்பட்ட நிகழ்வை மத்திய அரசு ஆதரிக்கிறது. பாகிஸ்தான் ராணுவ உதவியோடு எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்ட தாக்குதலை இந்திய ராணுவம் நிகழ்த்தியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.