

டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் தமிழக மாணவர் சரவணன் மர்ம மரணம் குறித்து சிறப்பு விசாரணை நடத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் அன்புமணி கூறும்போது, “கடந்த வாரம் எய்ம்ஸ் மாணவர்கள் சிலர் என்னை சந்தித்தனர். அவர்களிடம் கிடைத்த தகவல் மற்றும் நாளேடுகளில் வந்த செய்தி களில் இருந்து சரவணன் மரணம் ஒரு தற்கொலை அல்ல எனத் தோன்றுகிறது. இது குறித்து நான் எய்ம்ஸ் இயக்குநர் மற்றும் பிரேதப் பரிசோதனை தடயவியல் மருத்துவர்களிடம் பேசினேன்.
இதையடுத்து டெல்லி காவல் துறை ஆணையரை சந்தித்து புகார் அளிக்க முடிவு செய்தேன். எனது கோரிக்கையை ஏற்று அவர், ஒரு துணை ஆணையரின் நேரடி கண் காணிப்பில் சரவணன் வழக்கை விசாரிப்பதாக உறுதி அளித்தார். வரும் 25-ம் தேதி மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான இறுதிக் கலந் தாய்வு நடைபெற உள்ளது. இதற்கு முன் சரவணனின் இடம் காலியிட மாக அறிவிக்கப்பட்டால் அந்த இடத்தை பெறலாம் என்ற நோக்கத்தில் கொலை நடந்திருக்க வும் வாய்ப்புள்ளது.
இந்த வழக்கில் முறையான விசாரணைக்காக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்திக்க உள்ளேன்” என்றார்.
கேஜ்ரிவாலுக்கு மனு
டெல்லி எய்ம்ஸில் பட்டமேற் படிப்பு படித்து வந்த திருப்பூர் மாணவர் சரவணன் கடந்த 10-ம் தேதி தனது வாடகை குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை கேட்டு தமிழக முதல்வரிடம் சரவணனின் குடும்பத்தினர் மனு அளித்தனர். மேலும் இந்த வழக்கில் நீதி விசாரணை கோரி டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு கடந்த 15-ம் தேதி மனு அனுப்பினர்.
இதற்கிடையே சரவணன் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்த வலியுறுத்தி தமிழக அரசு சார்பிலும் டெல்லி காவல்துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.