

ஹரியாணா மாநிலம் மனேசர், நவுரங்கபூர் மற்றும் லக்நவுலா பகுதியில் உள்ள சுமார் 912 ஏக்கர் வேளாண் நிலங்களை அரசு கையகப்படுத்தி தொழிற்சாலை கட்டவுள்ளதாக நில உரிமையாளர் களுக்கும், விவசாயிகளுக்கும் கடந்த 2004-ல் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் பதறிப் போன நில உரிமையாளர்களும், விவசாயிகளும், தனியார் பில்டர்கள் கேட்ட சொற்ப தொகைக்கு 400 ஏக்கர் வரையிலான நிலங்களை அவசர, அவசரமாக விற்றனர். பின்னர் 2007-ல் தனியார் பில்டர்கள் அந்த நிலங்களை விற்க வசதியாக கையகப்படுத்தும் நோட்டீஸை அரசு திரும்ப பெற்றுக் கொண்டது.
இதனால் விவசாயிகளும், நில உரிமையாளர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் ரூ.1,500 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வெறும் ரூ.100 கோடிக்கு தனியார் பில்டர்களிடம் விற்க வைத்துவிட்டதாக விவசாயிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த சிபிஐ, அரசு அதிகாரிகளின் துணையுடன், தனியார் பில்டர்கள் இந்த சதியில் ஈடுபட்டதை கண்டறிந்தது. மேலும் அப்போது முதல்வராக பதவி வகித்த காங்கிரஸ் தலைவர் பூபிந்தர் சிங் ஹுடாவுக்கும் இந்த சதியில் தொடர்பு இருந்ததா கவும், இதற்காக அவருக்கு சட்ட விரோதமான முறையில் கோடிக் கணக்கில் பணப் பரிமாற்றம் செய் யப்பட்டதாகவும் தெரியவந்தது.
இந்தச் சூழலில் ஹுடா மீது இந்த ஊழல் தொடர்பாக சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை நேற்று கிரிமினல் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனால் முன்னாள் முதல்வர் ஹுடாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.