Published : 16 Nov 2014 10:46 am

Updated : 16 Nov 2014 10:46 am

 

Published : 16 Nov 2014 10:46 AM
Last Updated : 16 Nov 2014 10:46 AM

திரைப்படம் பார்த்த சாகசம்!

இப்போதெல்லாம் திரைப்படங்களை அலைபேசி, டேப்லெட்டின் ‘அகன்ற திரை’க்குள் பார்த்து விட முடிகிறது. அந்தக் காலத்தில் குமுதம், கல்கண்டு இதழ்களை ஒருவருக்கொருவர் கைமாற்றி வாசித்ததுபோல், இப்போது கொரியா, ஈரான் திரைப்படங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள் நண்பர்கள். 30 ஆண்டுகளுக்கு முன்னர் நிலைமை அப்படிச் சிலாக்கியமாக இல்லை. அதாவது, என்னைப் போன்ற சிறுவர்களுக்கு.

அப்போதெல்லாம் திரைப்படம் பார்ப்பது என்பது ஏழு கடல், ஏழு மலைகளைத் தாண்டி கிளிக்கூண்டில் இருக்கும் அரக்கனின் உயிரைப் பறிக்கும் சாகசத்துக்கு ஒப்பானது. அம்மா மிகவும் கண்டிப்பானவர் என்பதால், திரையரங்கம் போய்ப் படம் பார்ப்பது மிகப் பெரிய சவால். பக்கத்து வீட்டுக்காரர்கள் யாராவது படம் பார்த்துவிட்டு வந்து கதை சொன்னால், அதிலேயே படம் பார்த்த திருப்தியை அடைய வேண்டும். இல்லை என்றால், வெறும் போஸ்டரை மட்டும் பார்த்து மனதைத் தேற்றிக்கொள்ள வேண்டியதுதான்.

செஞ்சியில் அப்போது ‘ரங்கநாதா’ என்று ஒரேயொரு திரையரங்கம்தான். அதில் எனக்கு நினைவு தெரிந்த நாளில் டிக்கெட் கட்டணம் 45 பைசா. தினமும் 3 காட்சிகள் ஓட்டுவார்கள். சனி, ஞாயிறுகளில் மட்டும் காலைக் காட்சிக்கு வேறு ஏதாவது ஒரு படம் ஓடும். ஒரு படம் அதிகபட்சமாக 5 நாட்கள் ஓடினால் பெரிய விஷயம். எம்.ஜி.ஆர். படம் என்றால் ஒரு வாரம், 10 நாள் வரை தாக்குப்பிடிக்கும். தியேட்டரில் கூட்டம் குறைந்துவிட்டால், படத்தை மாற்றிவிடுவார்கள். அதற்கு முதல் நாளே அந்தப் படத்தின் போஸ்டர் மீது ‘இப்படம் இன்றே கடைசி’ என்று சிறிய பிட் நோட்டீஸ் ஒட்டுவார்கள். அதுவே எப்படியாவது படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிடும்.

‘கமிஷன்’ காசில் படம்

கடையில் பொருட்கள் வாங்க, அம்மா கொடுத்தனுப்பும் காசில் 3 பைசா, 5 பைசா என்று ‘கமிஷன்’ பிடித்து 45 பைசாவைச் சேர்ப்பதற்குள் மாசமே கடந்துவிடும். கஷ்டப்பட்டுக் காசைச் சேர்த்துவிட்டாலும் அம்மாவிடம் அனுமதி வாங்குவது குதிரைக் கொம்புதான். அவர் இடும் கட்டளைகளை (வீட்டு வேலைகள்தான்!) தட்டாமல் செய்ய வேண்டும். ஒன்றிரண்டு நாட்களுக்கு நல்ல பிள்ளையாய் நடிக்க வேறு வேண்டியிருக்கும். மிகவும் கஷ்டமான விஷயம் அதுதான். அம்மாவுக்குக் கோபம் இல்லாத நேரம் பார்த்து, பேச்சைத் தொடங்க வேண்டும். “அம்மா, அந்தப் படம் நல்லா இருக்குன்னு சாந்தி அக்கா, கீதா அக்கா எல்லாம் பாத்துட்டுச் சொன்னாங்க. நீ காசுகூடக் கொடுக்க வேணாம்மா, எம் ஃபிரண்டு ஆறுமுகம் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லியிருக்காம்மா..” என்று முடிப்பதற்குள் நாக்கு வறண்டுவிடும். பல நாள் முயற்சி பலனளிக்கும். “சரி… போ…” என்ற அம்மாவின் அந்த வார்த்தை, படம் பார்க்கும் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கிவிடும்.

பாதியில் பார்த்த படங்கள்

பல நாள் நான் தியேட்டருக்குள் நுழையும்போது கொஞ்சம் படம் ஓடியிருக்கும். பக்கத்தில் இருக்கும் ஆளிடம் ‘படம் போட்டு ரொம்ப நேரமாச்சா’ என்று கேட்பேன். சிலர், ‘இல்லப்பா, கொஞ்ச நேரம்தான் ஆச்சு... ஒரு பாட்டுதான் போச்சு’ என்று இதமாகப் பதில் சொல்வார்கள். சிலரோ வேற்றுக்கிரகவாசியைப் பார்ப்பதுபோல உற்றுப் பார்த்துவிட்டு, பேசாமல் இருப்பார்கள். சிவாஜி நடித்த ‘அவன் ஒரு சரித்திரம்’ படத்தை ஸ்கூல் பிள்ளைகளுக்காக ஒரு நாள் ஸ்பெஷல் ஷோவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். டிக்கெட் 25 பைசாதான். “நாளைக்குப் படத்துக்குக் கூட்டிட்டுப் போறோம். வர்றவங்க பேரு கொடுக்கலாம்” என்று வாத்தியார் சொன்னதும், எப்படியும் காசு கிடைத்து

விடும் என்ற நம்பிக்கையில் என் பெயரையும் கொடுத்து விட்டேன். ஆனால், அந்த 25 பைசாவுக்காக இரண்டு நாட்களாக அம்மாவிடம் வாங்கிய அடி, இப்போதும் முதுகில் வலிப்பது மாதிரியே இருக்கிறது.

எட்டாம் வகுப்பைத் தாண்டிய பிறகு, மனதில் கொஞ்சம் தைரியம். அம்மாவுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாகப் படம் பார்க்கத் தொடங்கினேன். அப்போது பெரிய அக்காவின் கணவர் டீக்கடை வைத்திருந்ததால், பள்ளிக்குச் செல்லும்போது செலவுக்குக் காசு கொடுப்பார். அதைச் சேர்த்து வைப்பேன். அதனால், அம்மாவிடம் கமிஷன் அடிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. திருட்டுத்தனமாகப் படம் பார்ப்பதிலும் ஒரு ‘தொழில் நுட்ப’த்தைக் கடைப்பிடித்தேன். பகல் காட்சி எத்தனை மணிக்குத் தொடங்கி எத்தனை மணிக்கு முடியும், முதல் காட்சி எப்போது தொடங்கும் என்பதெல்லாம் அம்மாவுக்கு நன்றாகத் தெரியும்.

பகல் காட்சி இரண்டரை மணிக்குத் தொடங்கும் என்பதால், 3 மணி வரை வீட்டில் இருப்பேன். அதன்பிறகு, நண்பன் வீட்டுக்குப் போவதாகச் சொல்லிவிட்டுப் புறப்படுவேன். அப்போதெல்லாம் படம் தொடங்கி ஒரு மணி நேரம் வரை டிக்கெட் கொடுப்பார்கள். அதனால், மூன்றரை மணிக்குச் சென்று பாதிப் படம் பார்ப்பேன். இரண்டு நாள் கழித்து மீண்டும் படத்துக்குப் போவேன். முதல் பாதி படத்தை மட்டும் பார்த்துவிட்டு இடைவேளை விட்டதும் வீட்டுக்கு வந்துவிடுவேன். இதனால், அம்மாவுக்குச் சந்தேகம் வராது. இப்படி தவணை முறையில் பார்த்த படங்கள் ஏராளம்.

இப்படி அம்மாவிடம் அழுதும் அடி வாங்கியும் திருட்டுத் தனமாகவும் நிறையப் படங்களைப் பார்த்துவிட்டேன். படிக்கும் வயதில் சினிமா மேல் அப்படியொரு ஆர்வம், பைத்தியம். இன்றைக்கும் வீட்டில் தொலைக்காட்சியில் பழைய படங்களைப் பார்க்கும்போது, “இந்தப் படத்தைப் பார்க்க அம்மாவிடம் அடி வாங்கினேன், இந்தப் படத்தைத் திருட்டுத்தனமாகப் பார்த்தேன்” என்று பிள்ளைகளுடன் என் மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொள்வது உண்டு. அப்போது, மனதில் ஒரு காலப்பயணம் தொடங்கியிருக்கும்.

- ஜி. பாலமுருகன் தொடர்புக்கு: balamurugan.gurusamy@thehindutamil.co.in

கிராமஃபோன்திரைப்படம்சினிமாதிரையரங்கம்தியேட்டர்

You May Like

More From This Category

nehru-says

360: நேரு சொல்கிறார்

கருத்துப் பேழை

More From this Author