

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ.) சம்பவத்தில் தேடப்பட்டு வந்த அதன் ஆய்வு மாணவர் உமர் காலீத் உள்ளிட்டோர் பல்கலைக்கழக வளாகத்துக்குத் திரும்பியுள்ளனர்.
இவர்களை கைது செய்வதா அல்லது சரணடைய வைப்பதா என்பது குறித்து ஜே.என்.யூ. நிர்வாகத்துடன் போலீஸார் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீவிரவாத தாக்குதலில் தண்டனை பெற்று தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் நினைவு நாள் கடந்த பிப்ரவரி 9-ல் வளாகத்தில் அனுசரிக்கப்பட்டது. இதில், தேசவிரோத கோஷமிட்டதாக மாணவர் தலைவர் கண்ணய்யா கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே, தேசவிரோத கோஷமிட்ட சம்பவத்தின் முக்கியக் குற்றவாளி என அதன் ஆய்வு மாணவர் உமர் காலீத் என போலீஸார் அறிவித்து இருந்தனர். இவரது மொபைல் போனில் பேசப்பட்ட குரல் பதிவுகளை வேவு பார்த்ததுடன் காலீத்துடன் சேர்த்து மற்ற மாணவர்களையும் நாடு முழுவதும் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், தேடப்பட்டு வந்த காலீத், ராமா நாகா, அசுதோஷ்குமார், அனந்த் பிரகாஷ் மற்றும் அனிர்பான் பட்டாச்சார்யா உட்பட சில மாணவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு ஜே.என்.யூ வளாகத்திற்கு திரும்பி உள்ளனர். இவர்கள் அனைவரும் இணைந்து போலீஸில் சரணடைந்து நீதிமன்றத்தில் தங்கள் மீதான தேசவிரோத வழக்கை சந்திக்கும் நோக்கில் வளாகம் திரும்பியுள்ளதாகக் கருதப்படுகிறது. இதற்காக, அனைவரும் வளாகத்தின் நிர்வாகக் கட்டிடத்தின் முன்பு மாணவர்கள் குழுவுடன் சேர்ந்து இரவு முழுவதிலும் ஆலோசனை நடத்தினர்.
பிறகு நேற்று இரவு அங்கு கூடியிருந்த மாணவர்கள் கூட்டத்தில் பேசிய காலீத் கூறுகையில், "கடந்த ஆறு வருடங்களாக இந்த வளாகத்தின் மாணவர் அரசியலில் கலந்துகொண்டு வருகிறேன். அப்போது, என்னை ஒரு முஸ்லிமாக நான் என்றுமே உணர்ந்ததில்லை. அதேசமயம், என்னை ஒரு முஸ்லிமாக நான் எப்போது முன்னிறுத்திக் கொள்ளவில்லை.
ஆனால், கடந்த பத்து நாட்களில் தான் என்னை நான் ஒரு முஸ்லிமாக உணர்ந்தேன். இவர்கள் தேசப்பற்றைப் பற்றி எங்களுக்கு கூறுகிறார்கள். இவர்கள் இந்நாட்டின் பெரும்பான்மையினராக இருக்கலாம். ஆனால், எங்கள் மீது அவர்களுக்கு ஒரு பயம் இருப்பது தெரிகிறது. எங்கள் போராட்டங்களைக் கண்டு அவர்களுக்கு அச்சம் உள்ளது’ எனத் தெரிவித்தார்.
இவரது பேச்சை அங்கு கூடியிருந்த மாணவர்கள் கூட்டம் கைதட்டி ஆரவாரத்துடன் வரவேற்றது. இந்த கூட்டத்தின் முடிவுல் கண்ணய்யாவை போல் போலீஸார் தம் அனைவரையும் வளாகத்தின் உள் நுழைந்து கைது செய்ய முடிவானதாக ‘தி இந்து’விடம் ஜே.என்.யூ மாணவர்கள் வட்டாரம் கூறுகிறது.
இந்தத் தகவல் டெல்லி போலீஸாருக்கும் மாணவர்கள் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், வளாகத்தில் புகுந்து போலீஸார் மாணவர்களை கைது செய்ய டெல்லி போலீஸார் விரும்பவில்லை. இவ்வாறு கண்ணய்யாவை கைது செய்தமைக்காக எழுந்த சர்ச்சையில் மீண்டும் சிக்க போலீஸார் விரும்பாதது அதன் காரணம். இதே எண்ணத்தில் ஜே.என்.யூவின் துணைவேந்தரும் இருப்பதாகக் கருதப்படுகிறது.
இதற்கு பதிலாக காலீத்துடன் குற்றம் சாட்டப்பட்ட அனைத்து மாணவர்களும் வளாகத்தின் முக்கிய வாசலில் சென்று போலீஸாரிடம் சரணடைய வேண்டும் என துணைவேந்தர் விரும்புவதாகவும் தெரிய வந்துள்ளது. இதன் மீதான இறுதி முடிவை காலை 11.00 மணிக்கு துணைவேந்தர் தலைமையில் நடைபெறவிருக்கும் நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது.
காலீத் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட மற்ற மாணவர்கள் யாருமே தேசவிரோத கோஷம் இடவில்லை எனவும், வெளியில் இருந்து வந்த ஒரு கும்பல் செய்த சதியில் அனைவரும் சிக்க வைக்கப்படுவதாகவும் ஜே.என்.யூ மாணவர்களின் ஒரு பிரிவினர் கருதுகின்றனர். இதற்கு அதன் பேராசிரியர்களின் ஒரு பகுதியினரும் ஆதரவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், மாணவர்கள் கைதாவது குறித்து ஜே.என்.யூ ஆசிரியர்கள் சங்க கூட்டமும் காலை 11.00 மணிக்கு கூடி முக்கிய முடிவு எடுக்க உள்ளது.
இந்த இரு கூட்டங்களின் முடிவுகளுக்கு பின் தன் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க டெல்லி போலீஸார் வளாகத்தின் முக்கிய வாசலில் கூடி உள்ளனர். வளாகத்தை சுற்றிலும் பல இடங்களில் டெல்லி போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லி போலீஸாரால் குற்றம் சாட்டப்பட்டு தேடப்பட்டு வந்த இந்த மாணவர்கள் அனைவரும் இத்தனை நாட்கள் எங்கிருந்தார்கள் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.