

பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம் காரணமாகவே 17 இளைஞர்கள் அல்-காய்தாவில் இணைந்துள்ளனர் என்று டெல்லி நீதிமன்றத்தில் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் அல்-காய்தா தீவிரவாத அமைப்பை தொடங்க முயற்சி நடப்பதாக உளவுத் துறையினர் கடந்த ஆண்டு எச்சரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து டெல்லி சிறப்புப் படை போலீஸார் நாடு முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் 2015 டிசம்பர் முதல் 2016 ஜனவரி வரை பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
முகமது ஆசிப், ஜாபர் மசூத், முகமது அப்துல் ரஹ்மான், சையது அன்வர் ஷா, அப்துல் சமி ஆகிய 5 பேரும் சிறையில் உள்ளனர். மேலும் 12 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதுதொடர்பான வழக்கு டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. கைதான 5 பேர், தலைமறைவாக உள்ள 12 பேர் என மொத்தம் 17 பேருக்கு எதிராக டெல்லி போலீஸார் கடந்த 10-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
அதில் 17 பேரும் அல்-காய்தா தீவிரவாத அமைப்பில் இணைந்ததற்கான காரணம் குறித்து டெல்லி போலீஸார் விரிவான விளக்கம் அளித்துள்ளனர். அந்த குற்றப்பத்திரிகையில் கூறியிருப்பதாவது:
கைதான சையது அன்வர் ஷா என்பவர் முகமது உமரை (தலைமறைவாக இருப்பவர்) சந்தித்துள்ளார். இருவரும் பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவர உயிரிழப்பு குறித்து விவாதித்துள்ளனர். அதைத் தொடர்ந்து இந்தியாவில் முஸ்லிம்கள் பாதிக்கப்படுவதற்கு பழிவாங்க இருவரும் அல்-காய்தாவில் இணைந்துள்ளனர். இதில் உமர் தற்போது பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதேபோல மற்ற இளைஞர் களும் பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம் காரணமாகவே அல்-காய்தாவில் சேர்ந்துள்ளனர். இதில் சில இளைஞர்கள் பாகிஸ்தான் சென்று ஜமாத் உத் தவா தலைவர் ஹபீஸ் சையது, லஷ்கர் இ- தொய்பா தலைவர் ஜகியூர் ரஹ்மான் லக்வி உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை பெற்றுள்ளனர்.
மேலும் பாபர் மசூதி இடிப்பு சம்பவத்துக்கு பழிக்குப்பழி வாங்க அயோத்தியில் உள்ள ராம் மந்திர் கோயில் மீது தாக்குதல் நடத்துவதற்காக 3 பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவினர். அவர்கள் உத்தரப்பிரசேத்தில் நடந்த என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப் பட்டனர்.
இவ்வாறு அந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப் பட்டுள்ளது.