

கடந்த 11 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிஹாரின் கிரிமினல் அரசியல்வாதி முகம்மது சகாபுத்தீன் சனிக்கிழமை விடியற்காலை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த சகாபுத்தீனுக்கு அலங்கார வளைவுகள் அமைத்து, நூற்றுக்கணக்கான கார்கள் அணிவகுப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்டது
பிஹாரின் சிவான் தொகுதியை சேர்ந்த முன்னாள் மக்களை உறுப்பினர் முகம்மது சகாபுத்தீன். இம்மாநில கிரிமினல் அரசியல்வாதிகள் பட்டியலில் இடம் பெற்றுவர் மீது கொலை, கொள்ளை, கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உட்பட சுமார் 40 வழக்குகள் பதிவாகி நடைபெற்று வருகின்றன.
இதில் இரு சகோதரர்களை கொன்ற வழக்கில் சகாபுத்தீன் கைதாகி ஜாமீனில் இருந்தார். பிறகு இந்த வழக்கின் முக்கிய சாட்சியான ராஜீவ் ரோஷனும் கொல்லப்பட சகாபுத்தீனின் ஜாமீன் ரத்தாகி கடந்த நவம்பர் 2005-ல் டெல்லியில் உள்ள தனது எம்பி அரசு வீட்டில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
அப்போது முதல் சிவானின் சிறையில் அடைக்கப்பட்டவர் கடந்த ஜூலையில் பத்திரிகையாளர் ராஜ்தேவ் ரஞ்சன் கொலையில் சகாபுத்தீன் மீதும் புகார் கிளம்பியது. இதனால், அங்கிருந்து பாகல்பூர் சிறைக்கு மாற்றப்பட்ட சகாபுத்தீன் இன்று விடுதலையானார். இவருக்கு கடந்த புதன்கிழமை பாட்னாவின் உயர் நீதிமன்றம் ராஜீவ் ரோஷன் வழக்கில் ஜாமீன் வழங்கி இருந்தது.
இவரை வரவேற்று பாகல்பூர் சிறையில் இருந்து சிவான் அழைத்து செல்ல நூற்றுக்கணக்கான வாகனங்கள் காலை முதல் அணிவகுத்து நின்றிருந்தன. சிறையின் முன் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களில் லாலு கட்சியின் சில எம்எல்ஏக்களும் இருந்தனர். இதன், இருதினங்களுக்கு முன்பாக அவரது சிவான் தொகுதியில் சுமார் 60 கி.மீ தொலைவிற்கு பல அலங்கார வளைவுகள் சகாபுத்தீன் ஆதரவாளர்களால் அமைக்கப்பட்டிருந்தன. இதுபோல், சிறையில் இருந்து விடுதலையாகும் ஒரு கிரிமினல் அரசியல்வாதிக்கு இந்தியாவில் எங்குமே வரவேற்பு அளிக்கப்பட்டதில்லை எனக் கருதப்படுகிறது. இதற்கு சகாபுத்தீன் அவரது தொகுதிவாசிகளால் முக்கிய நாயகனாகக் கருதப்படுவது காரணம் ஆகும்.
சிறையில் இருந்து விடுதலையான சகாபுத்தீன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'எனது தலைவராக லாலு தான் இருந்தார். அவரே எனது தலைவராக இருக்கிறார், இனி வரும் காலங்களிலும் இருப்பார். சூழல் காரணமாக நிதிஷ்குமார் பிஹார் முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்கட்சியான பாரதிய ஜனதாவின் தலைவர் சுசில்குமார் மோடியின் செயல்பாடுகளை நான் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. என் மீதான வழக்கின் விசாரணைகளின் ஒரு அங்கமாக நான் ஜாமீனில் விடுவிக்கபட்டிருக்கிறேன்' எனத் தெரிவித்தார்.
சிவானின் ஜிராதி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக 1980களில் முதன் முறையாக பிஹார் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் சகாபுத்தீன். பிறகு லாலுவின் நெருங்கிய சகாவானவர் ஜனதா தளம் சார்பில், 1990 மற்றும் 1995 ஆம் ஆண்டின் சட்டப்பேரவை தேர்தல்களில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996, 1998, 1999 மற்றும் 2004 ஆகிய மக்களவை தேர்தல்களிலும் லாலு கட்சியின் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2005-ல் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற பின் அவரது மனைவியான ஹென்னா சகாபுத்தீனை இருமுறை சிவான் தொகுதியில் லாலு போட்டியிட வைத்தார். இதில் ஹென்னாவிற்கு தோல்வி ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன் சகாபுத்தீனை பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரின் அமைச்சரவையில் உறுப்பினராக இருக்கும் அப்துல் கபூர் சிறையில் சென்று சந்தித்தது சர்ச்சைக்குள்ளாகி இருந்தது.