

வங்கதேசத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஒரே வாரத்தில் இரு தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் தேசிய பாதுகாப்பு குழு (என்எஸ்ஜி) அங்கு செல்கிறது.
இந்த இரண்டு தாக்குதல் குறித்தும் விரிவாக அலசி ஆராய்வதற்காக என்எஸ்ஜி குழுவினர் அங்கு செல்கின்றனர்.
வங்கதேசத் தலைநகர் டாக்காவில் தாக்குதல் நடத்தியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்கு தாக்குதல் தொடரும் எனவும் எச்சரித்துள்ளனர்.
அண்டை நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதத் தாக்குதல் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு என்எஸ்ஜி குழு செல்கிறது.
தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்ற இடங்களில் என்எஸ்ஜி குழு ஆய்வு மேற்கொள்ள வங்கதேச அரசும் அனுமதி அளித்துவிட்டது. இதனைத் தொடர்ந்து இவ்வார இறுதியில் என்எஸ்ஜி குழுவினர் அங்கு செல்வார்கள் எனத் தெரிகிறது.
1984-ம் ஆண்டு என்எஸ்ஜி படை உருவாக்கப்பட்டது. தீவிரவாதத் தடுப்பு, விமானக் கடத்தல் தடுப்பு போன்ற பணிகளில் இப்படை ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.
உலக நாடுகளிலும் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படும்போது என்எஸ்ஜி குழுவானது அந்நாட்டு அனுமதியுடன் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டு தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தங்கள் புரிதலை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்வது வழக்கம். அந்த வகையில் இவ்வார இறுதியில் என்எஸ்ஜி குழு வங்கதேசம் செல்கிறது.
ஆனால், வங்கதேசத்தில் நடைபெற்றது ஐ.எஸ். தாக்குதலே இல்லை அந்நாட்டு பிரதமர் கூறியுள்ளார்.