

டெல்லியில் 19 வயது ஜெர்மன் இளைஞர் பெஞ்சமின் ஸ்கோல்ட் மீது ரிக்ஷா ஓட்டுநர் ஒருவர் பிளேடினால் தாக்கிவிட்டு அவரது பொருட்களைக் கொள்ளை அடித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த நபர் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது.
பெஞ்சமின் இரவு 11 மணியளவில் அமிர்தசரஸுக்குச் செல்ல பேருந்து நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். இதற்காக ரிக்ஷாவை ஏற்பாடு செய்து கொண்டார். ஆனால் வழிமாறிச் சென்ற ரிக்ஷா ஓட்டுநர் இந்த வழிதான் குறைந்த தூரப் பாதை என்று பெஞ்சமினிடம் கூறியுள்ளார்.
“ரிக்ஷா ஓட்டுநர் கீதா காலனி ஃபிளை ஓவர் அருகே மாற்றுப்பாதையில் சென்றார். அது ஷார்ட் கட் என்று கூறினார். மேலும் நடுவழியில் தன் நண்பர் என்று கூறி வேறு ஒருவரையும் ஏற்றியுள்ளார். பிறகு பிளை ஓவருக்குக் கீழே யமுனா காதர் என்ற இடத்துக்கு ரிக்ஷாவை ஓட்டிச் சென்றுள்ளார். அந்த இடத்தில்தான் ஜெர்மனி இளைஞர்களின் பொருட்களை கேட்டு கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு காட்டவே அவரை ரிக்ஷா ஓட்டுநர் தாக்கியுள்ளார். ஆனால் எப்படியோ அவரிடமிருந்து தப்பி பிளை ஓவருக்கு வந்தார் பெஞ்சமின். அங்கு அவருக்கு வேறு இரண்டு பேர் உதவி புரிந்துள்ளனர். அவர் பிறகு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்” என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குற்றம்புரிந்த ரிக்ஷா ஓட்டுநர் யார் என்பது தெரிந்து விட்டது என்றும் விரைவில் அவரைக் கைது செய்வோம் என்றும் போலீஸ் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை அடுத்து வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், “இந்தத் தாக்குதல் குறித்து அறிக்கை கேட்டிருக்கிறேன். இவருக்கு சிறந்த வகையில் சிகிச்சை அளிக்குமாறு டெல்லி அரசைக் கேட்டுக் கொண்டுள்ளேன்” என்றார்.