Published : 30 Jan 2014 12:00 AM
Last Updated : 30 Jan 2014 12:00 AM

திருப்பதி: செம்மரக் கடத்தல் கும்பல் - போலீஸார் மோதல்

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மர கடத்தல் கும்பலுக்கும், போலீசாருக்கும் இடையே புதன்கிழமை நடந்த பயங்கர தாங்குதலில், கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். போலீஸ் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்தார்.

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்கள் கடத்தப்படுகின்றன. செம்மரக் கடத்தலைத் தடுக்க போலீஸார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கூட்டாக சேர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இந்த கடத்தலை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை.

தமிழகத்தில் உள்ள வேலூர், திருவண்ணாமலை, சேலம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து செம்மரங்களை வெட்டி கடத்த கூலி தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இதனால், போலீஸாரிடம் கூலித் தொழிலாளர்களே அதிக அளவில் சிக்குகின்றனர்.

கடந்த மாதம், சேஷாசலம் வனப்பகுதியில் செம்மர கடத்தல் கும்பலுக்கும், வனத்துறை அதிகாரிகளுக்கும் இடையே நடந்த தாக்குதலில் ஸ்ரீதர், டேவிட் ஆகிய இரண்டு வனத்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் கல்யாணி அணைக்கட்டு அருகே உள்ள வனப்பகுதியில் செம்மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக பீலேர் போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்து.

உடனடியாக ஆயுதம் ஏந்திய போலீஸார், வனப்பகுதிக்குச் சென்றனர். அங்கு 40பேர் கொண்ட கடத்தல் கும்பல், சுமார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரங்களை கடத்த முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். போலீஸாரைப் பார்த்ததும் அந்த கும்பல், கற்கள் மற்றும் கத்திகளால் தாக்க தொடங்கி உள்ளனர். அவர்களது தாக்குதலை சமாளிக்க போலீஸாரும் திருப்பி தாக்கினர்.

ஒரு கட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் முரளி படுகாயமடைந்தார். இதனைத் தொடர்ந்து வேறு வழியின்றி போலீஸார், கடத்தல் கும்பல் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். இருபது கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் அங்கிருந்து தப்பி விட்டனர். அவர்களை பிடிக்க போலீஸார் வனப்பகுதிகளில் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடத்தப்படவிருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். காயமடைந்த எஸ்.ஐ. முரளி சிகிச்சைக்காக திருப்பதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என்கவுன்ட்டரில் இறந்தவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. ஆனால், அவர் குறித்து முழுவிவரங்கள் தெரியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x