

பிஹாரில் அரசு கிளர்க் பணிக்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், கிரேட் 4 பணிக்கு ரூ.5 லட்சம் பேரம் பேசியதை தனியார் தொலைக்காட்சிகள் அம்பலப்படுத்தி உள்ளன.
பிஹாரில் மாநிலம் முழுவதும் அரசு கிளர்க் பணிக்கு சமீபத்தில் தேர்வு நடந்தது. அப்போது கேள்வித்தாள் வெளியானதால் பெரும் சர்ச்சை எழுந்தது. அத்துடன் பிஹார் மாநில அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் பரமேஷ்வர் ராம் மற்றும் 5 அதிகாரிகள், கிளர்க் வேலைக்கு தலா ரூ.5 லட்சம் முதல் 6 லட்சம் வரை லஞ்சம் கேட்டது அம்பலமானது. இதையடுத்து பரமேஷ்வர் ராம் உட்பட 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பிஹார் மாநில நீதிமன்றங்களில் கிரேட் 4 பணிக்கு ஆட்கள் தேர்வுக்கான தேர்வுகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பணிக்கு ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் ரூ.5 லட்சம் பேரம் பேசியதாக தனியார் தொலைக்காட்சிகள் நேற்று செய்திகள் வெளியிட்டன. இதுகுறித்த விவரம் வருமாறு:
பிஹார் மாநிலம் தர்பங்கா பகுதியைச் சேர்ந்த ஒருவர் கிரேட் 4 பணிக்காக விண்ணப்பித்துள்ளார். அவரிடம் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் சிறுபான்மைப் பிரிவு பொதுச்செயலாளர் என்று கூறிக் கொண்டு ஹமீதா அஷ்கரி என்பவர் பேரம் பேசியுள்ளார். ரூ.5 லட்சம் கொடுத்தால் அரசு பணிக்கு ஏற்பாடு செய்வதாக ஹமீதா பேரம் பேசும் காட்சிகளைத் தனியார் தொலைக்காட்சியினர் ரகசிய கேமராவில் படம் பிடித்து வெளியிட்டனர். இது மாநிலத்தில் மீண்டும் சர்ச்சையை எழுப்பி உள்ளது.
ஆனால், ஐக்கிய ஜனதா தளத் துக்கும் ஹமீதாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அந்தக் கட்சி நேற்று திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இதுகுறித்து ஐஜத செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார் கூறும்போது, ‘‘ஐஜத மாநில சிறுபான்மைப் பிரிவு தலைவர் முகமது சலாம், தர்பங்கா மாவட்ட ஐஜத தலைவர் சுனில் பாரதி உட்பட கட்சி நிர்வாகிகளிடம் ஹமீதா பற்றி தீவிர விசாரணை நடத்தினோம். அப்போது, அந்தப் பெண் ஐஜத.வில் இல்லை. அவருக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர்கள் உறுதிப்படுத்திவிட்டனர்’’ என்றார்.
இதற்கிடையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹமீதா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவான ஹமீதா மற்றும் அவரது குடும்பத்தினரைத் தேடி வருகின்றனர்.