Published : 09 Dec 2013 11:50 AM
Last Updated : 09 Dec 2013 11:50 AM

மக்களவைத் தேர்தலிலும் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் - சிவராஜ் சிங் சவுகான் நம்பிக்கை

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் கட்சிக்கு அதிக எம்.பி.க்களை அளிக்கும் மாநிலமாக மத்தியப் பிரதேசம் திகழும். அதற்காக முழு முயற்சியுடன் பாடுபடுவோம் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் மூன்றாவது முறையாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆட்சியை கைப்பற்றியுள்ளார்.

மாநிலத்தில் தங்களுக்கு கிடைத்த வெற்றி, பாஜக என்ற கட்சி அமைப்புக்காக கிடைத்த வெற்றி என்று அவர் கூறியுள்ளார்.

சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “எனது இடத்தில் யார் இருந்திருந்தாலும், இதுபோன்ற மகத்தான வெற்றியை பாஜக பெற்றிருக்கும்.

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, மத்திய பிரதேசத்தை பாரபட்சமாக நடத்துகிறது. டெல்லி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், ஆட்சியில் காங்கிரஸ் அமர்வதை விரும்பவில்லை.

மக்களவைத் தேர்தல்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை நரேந்திர மோடி தலைமையில் எதிர்கொள்ள இருக்கிறோம். அந்த தேர்தலுக்குப் பின் பாஜக மத்தியில் ஆட்சி அமைக்க மற்ற மாநிலங்களைவிட மத்திய பிரதேச மாநிலத்திலிருந்துதான் அதிக எம்.பி.க்களை அனுப்பி வைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த குறிக்கோளை அடைய முழு முயற்சி எடுப்போம். இந்த மகத்தான வெற்றியை பெற்றுத் தர உதவியதற்காக கட்சிக்கும், தொண்டர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் ஒரு சாதாரண தொண்டன். இது மக்களுக்கு கிடைத்த வெற்றி.

மோடிக்கு நன்றி

இந்த வெற்றியை பெற்றுத் தந்த பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உள்பட அனைத்து மூத்த தலைவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மத்திய பிரதேசத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அந்த மாநிலத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற பல பேரணிகளில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x