

அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது:
வங்கிகளை தனியார்மயமாக்குவது, பல்வேறு வங்கிகளை ஒன்றிணைப்பது போன்ற மத்திய அரசின் மக்கள் விரோத வங்கி சீர்திருத்தங்களுக்கு எதிராகவும், வாராக்கடன் ரூ.78 ஆயிரம் கோடியை வசூலிக்க வேண்டும், கடனை செலுத்தாதவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்துகிறோம்.
இதில் நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகளின் 80 ஆயிரம் கிளைகளில் பணி புரியும் 10 லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் 6 ஆயிரம் வங்கிக் கிளைகளைச் சேர்ந்த 60 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். இந்த வேலைநிறுத்தத்தால் வங்கிப் பணிகள் கடுமையாக பாதிக்கப் படும்.
இவ்வாறு அவர் கூறினார். வங்கி ஊழியர் சங்கங்கள் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.
வேலைநிறுத்தத்தால் பொது மக்கள் பாதிக்கப்படாத வகையில், அனைத்து வங்கி ஏடிஎம் இயந்திரங்களிலும் பணத்தை நிரப்பும் பணி நேற்று நடந்தது. நாளை (சனிக்கிழமை) வங்கிகளுக்கு முழு வேலை நாள் என்பதும், தொடர் விடுமுறை இல்லாததும் பொதுமக்களுக்கு ஆறுதல் தருவதாக உள்ளது.