

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு ஊழலில் திளைப்பதாகவும், வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும் பாஜக குற்றம்சாட்டி உள்ளது.
டெல்லி மாநகராட்சிகளுக்கு வரும் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ராம்லீலா மைதானத்தில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அமித் ஷா பேசியதாவது:
அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு மக்கள் நலனுக்காக எதையும் செய்யவில்லை. ஆனால் ஆளும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 13 எம்எல்ஏக்கள் மீது ஊழல் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தண்ணீர் வாரி யம், வக்ப் வாரியம் உள்ளிட்ட பல துறைகளில் ஊழல் நடந்துள்ளது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்த லின்போது கேஜ்ரிவால் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முடிந்த போதிலும் அவற்றை இன்னும் நிறைவேற்றவில்லை. ஆனால், உத்தரபிரதேசத்தில் பாஜக தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்று ஒரு வாரம்தான் ஆகிறது. அதற்குள் வாக்குறுதி அளித்தபடி விவசாய கடனை ரத்து செய்யாதது ஏன் என கேஜ்ரிவால் கேட்கிறார்.
பாஜக தொண்டர்கள் வீடு வீடாக சென்று இந்த உண்மை நிலையை மக்களிடம் எடுத்துக் கூறி, வரும் உள்ளாட்சித் தேர்தலுக்காக வாக்கு சேகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாஜக கொடி பறக்கும்
இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு பேசும்போது, “கடந்த 2014-ல் நடந்த மக்களவை பொதுத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமரானார். அதன் பிறகு நடந்த பெரும்பாலான சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. ஆனால், காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட பல கட்சிகள் தோல்வி அடைந்து வருகின்றன. விரைவில் நாடு முழுவதும் பாஜக கொடி பறக்கும். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நடந்தன. ஆனால் 3 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ஊழலே இல்லை” என்றார்.