Last Updated : 03 Jun, 2017 09:36 AM

 

Published : 03 Jun 2017 09:36 AM
Last Updated : 03 Jun 2017 09:36 AM

மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: சுரேஷ் பிரபுவுக்கு பாதுகாப்புத் துறை?

மத்திய அமைச்சரவையை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் மாற்றியமைக்க உள்ளார். ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, பாதுகாப்பு அமைச்சராகவும் இவரது இடத்தில் ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹாவும் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரதிய ஜனதா தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த 2014-ல் பதவியேற்றது. பிரதமர் நரேந்திர மோடி இதுவரை இரண்டு முறை தனது அமைச்சரவையை மாற்றி அமைத்துள்ளார். மத்திய பாது காப்பு அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் கடந்த மார்ச் 14-ம் தேதி மீண்டும் கோவா முதல்வராக பதவியேற்றார். இதனால் அவர் வகித்துவந்த பாது காப்புத் துறை, நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சராக இருந்த அணில் மாதவ் தவே கடந்த மே 18-ம் தேதி காலமானதால் அவரது அமைச்சகமும் காலியாக உள்ளது. இவ்விரு பதவிகளில் புதிய அமைச்சர்களை அமர்த்த வேண்டியுள்ளது.

இந்நிலையில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, பாது காப்புத் துறைக்கு மாற்றப்படுவார் எனக் கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் பாராட்டை பெற்றவ ரான சுரேஷ் பிரபு, அவரது நம்பிக்கைக்கு உரியவராகவும் கருதப்படுகிறார். ரயில்வே இணை அமைச்சராக உள்ள மனோஜ் சின்ஹாவுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு, சுரேஷ் பிரபுவின் இடத்தில் அமர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உ.பி.யின் காஜிபூரை சேர்ந்த சின்ஹாவின் பெயர் அம்மாநில முதல்வர் பதவிக்கும் ஆலோசிக்கப்பட்டது.

இதற்கிடையே வயது முதிர்ந்த தலைவர்களுக்கு அமைச்சரவை யில் இடமளிப்பதில்லை என்பது தொடக்கம் முதலாக பிரதமர் மோடியின் கொள்கையாக உள்ளது. இதன் காரணமாகவே மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷிக்கு அமைச் சரவையில் வாய்ப்பு கிடைக்க வில்லை எனக் கருதப்பட்டது.

என்றாலும் உ.பி.யின் முக்கியத் தலைவர் என்பதால் கல்ராஜ் மிஸ்ராவுக்கு மட்டும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது உ.பி. சட்டப்பேரவை தேர்தலும் முடிந்துவிட்ட நிலையில், பாஜகவின் மூத்த அமைச்சராக கல்ராஜ் மிஸ்ரா இருக்கிறார். இவருக்கு ஜூலை 1-ல் 75 வயது நிறைவடைகிறது. எனவே மிஸ்ராவிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு அவருக்கு மாநில ஆளுநர் பொறுப்பு அல்லது கட்சிப்பணி அளிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. எனவே இவருக்கு பதிலாகவும் புதிய அமைச்சர் நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

2019 தேர்தலில் பயனுள்ளதாக இருக்கும்படி இந்த நியமனங்கள் அமையும். இந்த அமைச்சரவை மாற்றங்கள் விரைவில் மேற்கொள்ளப்படலாம் எனத் தெரிகிறது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிக்கியிருக்கும் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதிக்கு எதிராக காங்கிரஸ் போர்க்கொடி உயர்த்தி இருப்பதும் இத்தருணத்தில் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x