Published : 29 Dec 2013 12:00 AM
Last Updated : 29 Dec 2013 12:00 AM

இந்திய அரசியலில் முதன்முறையாக கொடி இல்லாத கட்சி ஆட்சியை பிடித்தது; ஆம் ஆத்மி அடையாளமானது வெள்ளை தொப்பி

இந்திய அரசியலில் முதன்முறையாக தனக்கென கொடி இல்லாத, தமிழில் பாமரன் எனும் அர்த்தம் கொண்ட ஒரு கட்சி, இரண்டு முன்னணி தேசியக் கட்சிகளை வென்று டெல்லியில் ஆட்சி அமைத்துள்ளது.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் பொதுமக்கள் முன்னிலையில் எளிமையான முறையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். வழக்கமான அரசியல் வாதிகளைப்போல் அல்லாமல் பாமர மனிதனைப்போல சாதாரண உடை அணிந்து வந்த கேஜ்ரிவால் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களிடம் ஒரே ஒரு வித்தியாசத்தை மட்டும் பார்க்க முடிந்தது. அது, சுதந்திரப் போராட்ட காலங்களில் தியாகிகள் தங்கள் தலையில் அணிந்திருந்த வெள்ளை தொப்பி. அண்ணா ஹசாரேவால் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொப்பி, தற்போது அவரை விட ஆம் ஆத்மி கட்சியினரின் அடையாளமாகி விட்டது.

பதவி ஏற்பு விழாவினை மேடையிலிருந்து பார்க்கும்போது, மைதானம் முழுவதும் வெள்ளை தொப்பிகளால் நிரம்பி வழிந்தது. அத்துடன், பலரது கைகளில் நமது தேசிய கொடிகளையும் முதன்முறையாக ஒரு முதல்வரின் பதவி ஏற்பு விழாவில் பார்க்க முடிந்தது.

அதேபோல், சீறிப்பாயும் வாகனங்கள், விலை உயர்ந்த சொகுசு கார்களைப் பார்க்க முடியவில்லை. வழக்கமாக நிரம்பி வழியும் ’கார் பார்க்கிங்’ பகுதியிலும் அதிக அளவில் தனியார் வாகனங்களைப் பார்க்க முடியவில்லை. அரசு அதிகாரிகளின் வாகனங்களை மட்டுமே பார்க்க முடிந்தது. அரவிந்த் கேஜ்ரிவாலின் பிறந்த மாநிலமான ஹரியானா மற்றும் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.

விழா மேடையைச் சுற்றிலும் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களை வாழ்த்தி பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததன. சிலர், கேஜ்ரிவாலின் பெரிய அளவு புகைப்படங்கள் மற்றும் வித்தியாசமான வாசகங்கள் கொண்ட தட்டிகளுடன் ஊர்வலமாக வந்திருந்தனர்.

கடந்த 2011-ல் லோக்பால் மசோதாவை வலியுறுத்தி அண்ணா ஹசாரே போராட்டத்தைத் தொடங்கிய அதே இடத்தில் கேஜ்ரிவால் தனது அமைச்சர்களுடன் பதவி ஏற்றார். இவர் பதவி ஏற்பதற்கு மூல காரணமாக இருந்த அண்ணா ஹசாரே மற்றும் அவருக்கு நெருக்கமான கிரண்பேடி உள்ளிட்டோர் விழாவைப் புறக்கணித்தனர். பதவியேற்பு விழாவை முன்னிட்டு, சுமார் 1,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். விழாவில் கலந்துகொண்டவர்கள் போலீஸாருக்கு அதிக தொல்லை கொடுக்காமல் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டனர். இவ்விழாவில் சிலர், ஆம் ஆத்மியின் சின்னமான துடைப்பங்களை பெருமையுடன் உயர்த்தி பிடித்தது வித்தியாசமாக இருந்தது.

நேரடி ஒளிபரப்பு

கேஜ்ரிவால் தனது உரையை துவங்கும் முன், மேடையின் முன்னால் இருந்த மூங்கில் தடுப்பை ஒருவர் தள்ளிக் கொண்டு முன்னே வர முயன்றார். இதை கவனித்த கேஜ்ரிவால், ’தயவு செய்து தடுப்பை மீற விட வேண்டாம். இதனால், போலீசாருக்கு சிரமம் ஏற்படும்’ எனக் கேட்டுக் கொண்டார்.

மைதானத்தை சுற்றிலும் மேடைகள் அமைத்து, பதவி ஏற்பு விழாவை பல தொலைக்காட்சி சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x