

டெல்லியில் உணவு விடுதிக்குள் ஏழைக் குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் அம்மாநில துணை முதல்வர் சிசோடியா.
டெல்லி கன்னாட் பகுதியில் இருக்கிறது ஷிவ்சாகர் உணவு விடுதி. அங்கு சோனாலி ஷெட்டி என்ற எழுத்தாளர் தனது கணவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தெருவோரக் குழந்தைகள் 8 பேரை அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறார். ஆனால், தெருவோரக் குழந்தைகளை உணவகத்துக்குள் அனுமதிக்க முடியாது என அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சோனாலி செட்டி போலீஸில் புகார் செய்துள்ளார். உணவக உரிமையாளரும் சோனாலி மீது புகார் கொடுத்துள்ளார். சோனாலி, குழந்தைகளுக்கு இலவசமாக உணவு வழங்குமாறு கூறியதாக புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து கூடுதல் துணை ஆணையர் ரோமில் பானியா கூறும்போது, "இரு தரப்பினரும் புகார் கொடுத்துள்ளனர். புகார் கொடுத்த பெண் உணவக ஊழியர்கள் தன்னையும், சிறுவர்களையும் இழிவாக நடத்தியதாக கூறியுள்ளார்.
அதே வேளையில் உணவக உரிமையாளர் தரப்பில் அப்பெண், உணவக ஊழியர்களையும், வாடிக்கையாளர்களும் இடையூறு செய்தததாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. உரிய விசாரனைக்குப் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
விசாரணைக்கு உத்தரவு:
இந்நிலையில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு துணை முதல்வர் மனிஷ் சிசோடியா உத்தரவிட்டுள்ளார். "உணவகத்தின் நடவடிக்கை காலனி ஆதிக்க செயலை ஒத்தது. சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் உணவகத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்" என சிசோடியா தெரிவித்துள்ளார்.
சமூகத்தின் தோல்வி
நடந்த சம்பவத்தை ஒட்டுமொத்த சமூகத்தின் தோல்வி என குறிப்பிட்டுள்ளார் எழுத்தாளர் சோனாலி ஷெட்டி. அவர் மேலும் கூறும்போது "உணவகத்துக்குள் அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து 10 மணி நேரம் உணவக வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தேன். ஆனால் எந்தப் பயனும் இல்லை.
உணவகம் சார்பில் குழந்தைகளிடம் மன்னிப்பு கோரப்படும்வரை எனது போராட்டத்தை தொடர்வேன். நான் புகார் அளித்ததும் சில காவலர்கள் வந்தனர். ஆனால், அவர்கள் உணவக உரிமையாளரை விடுத்து என்னை திட்டினர். குழந்தைகளை அழைத்துக் கொண்டு வேறு எங்காவது செல்லுமாறு நிர்பந்தித்தனர்" என்றார்.