

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் 40,000 ரயில் பெட்டிகள் தயாரிக் கப்பட்டு வருவதாக ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு நேற்று தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை அடுத்த தும்மலபல்லியில் உள்ள கலை அரங்கில் ரயில்வே துறை சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர், திருப்பதி-ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ் ரயில், விஜயவாடா-ஹவுரா ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் கடப்பா-பென்லி மர்ரி இடையேயான டெமோ ரயிலை தொடங்கி வைத்தார்.
மேலும், குந்தக்கல் - வாடி இடையிலான மின்சார ரயில் மார்க்கத்துக்கும், குத்தி-தர்மாவரம் இடையிலான இருவழி ரயில் பாதை பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். மேலும், கடப்பா - பென்லி மர்ரி ரயில் மார்க்கத்தை நாட்டுடமை ஆக்கினார்.
திருப்பதி ரயில் நிலையத்தில் ஆட்டோமேட்டிக் லாண்டரி சிஸ்டம், விசாகப்பட்டினத்தில் டீசல் லோகோ ஷெட், விஜயவாடாவில் லோகோ பைலைட் பயிற்சி மையம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.
ஒரே நாளில் 3 புதிய ரயில்கள், 7 புதிய ரயில்வே வளர்ச்சி திட்டங்களைத் தொடங்கி வைத்த அமைச்சர் பேசியதாவது:
ஒரே நாளில் இவ்வளவு நலத் திட்டங்களை இதற்கு முன்பு யாரும் தொடங்கி வைத்திருக்க வாய்ப்பில்லை. ஆந்திர மாநிலம் ரயில்வே துறையில் சிறப்பான வளர்ச்சி அடைந்து வருகிறது. நாடு முழுவதிலும் ரயில்வே துறையில் தேக்க நிலையில் உள்ள பணிகள் விரைவாக பூர்த்தி அடைந்து வருகின்றன. கூடுதல் பாதுகாப் புடன் 40,000 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சியைவிட தற்போது ரயில்வே துறைக்கு 166 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அமராவதிக்கு மற்ற பகுதிகளில் இருந்து ரயில்வே இணைப்பு வழங்குவதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசும்போது, “ஆந்திர மாநிலத்தின் மீது மத்திய அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது என்பதற்கு இன்று நடந்த நிகழ்ச்சியே உதாரணம். ஒரே நாளில் 10 வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு ரூ.41 கோடி செலவில் ரயில்வே வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர்களுக்கு மாநில அரசு சார்பில் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஆந்திர மாநில அமைச்சர்கள், தென் மத்திய ரயில்வே துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.