

திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்டு வரும் லட்டு பிரசாதம் நான்கிலிருந்து இரண்டாக குறைக்கட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
திருப்பதி கோயில் லட்டு பிரசாதம் உலக பிரசித்தி பெற்றதாகும். திருமலைக்கு வரும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த பின்னர், லட்டு பிரசாதத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி செல்வது வழக்கம். ஆதலால், திருமலை-திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு இதுவரை கூடுதலாக ரூ.100-க்கு 4 லட்டுகள் விநியோகித்து வந்தது.
தினமும் திருப்பதி ஏழுமலையானை சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். நாளொன்றுக்கு சுமார் 3 லட்சம் லட்டுகள் தயாரிக்கபடுகின்றன. இதனிடையே, கடந்த வைகுண்ட ஏகாதசி முதல் மலை வழிப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு தலா 1 லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் தினமும் 20 ஆயிரம் லட்டுகள் விநியோகிக்கபடுகின்றன.
மேலும் ரூ.300 கட்டணம் செலுத்தி சிறப்பு தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு தலா ஒரு டிக்கெட்டுக்கு 2 லட்டு வழங்கப்படுகிறது. எனவே, பக்தர்களுக்கு கூடுதலாக வழங்கப்படும் லட்டு பிரசாதத்தை 4-ல் இருந்து 2 ஆகக் குறைத்துள்ளது. லட்டு பிரசாதம் குறைக்கப்பட்டதால் சாமானிய பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். தேவைக்கேற்ப கூடுதலாக லட்டுகளை தயாரித்து, பக்தர்களுக்கு தட்டுப்பாடின்றி பிரசாதம் வழங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.