

பிஹாரின் கிரிமினல்கள் பட்டியல் அரசியல்வாதி ரண்வீர் யாதவ் பாரதிய ஜனதாவில் சீட் கேட்டவர். இவரது முதல் மனைவி பூணம் தேவி ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ. இரண்டாவது மனைவியான கிருஷ்ணா யாதவ், ராஷ்டிரிய ஜனதாதளத்திற்காக மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார்.
இந்த மூன்று கட்சிகளை சேர்ந்தவர்களும் பிஹாரின் ககரியாவில் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். இந்த தொகுதியில், கடந்த வாரம்வரை பாஜக சார்பில் போட்டியிட தமக்கு அல்லது தம் முதல் மனைவியான பூணம் தேவிக்கு வாய்ப்பு கேட்டு வந்தார் ரண்வீர் யாதவ். பூணம், ஐக்கிய ஜனதாவின் ககரியா எம்.எல்.ஏ. கிருஷ்ணா, ககரியாவின் முனிசிபல் சேர்மனாக இருக்கிறார்.
உடன் பிறந்த சகோதரிகளான பூணம் மற்றும் கிருஷ்ணா, ஒரே வீட்டில் தன் கணவர் ரண்வீருடன் இணைந்து வாழ்கிறார்கள். ககரியா, பாஜகவின் கூட்டணிக் கட்சியான ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்திக்கு பாஜக ஒதுக்கி விட்டதால், ரண்வீருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதற்கிடையே, ரண்வீரின் இரண்டாவது மனைவியான கிருஷ்ணாவிற்கு லாலு வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இடம் கிடைத்து விட்டது. கிருஷ்ணா தேசிய தடகள வீரங்கனை. இப் போது, பூணம், தன் கட்சியான ஐக்கிய ஜனதாவிற்காக தொடர்ந்து பாடுபடுவதாக கூறுகிறார். பாஜக வின் ஆதரவாளரான ரண்வீர், தன் சகோதரி கிருஷ்ணாவிற்கு கண்டிப் பாக வாக்களிப்பார் என்கிறார் பூணம்.
இது குறித்து `தி இந்து’விடம் தொலைபேசியில் கிருஷ்ணா கூறுகையில், `நாங்கள் ஒரே வீட்டில் தங்கி யிருந்தாலும் அவரவர் கட்சிகளின் வெற்றிக்காக பாடுபடுவோம். எனக்காக என் அக்கா பூணம் தன் ஐக்கிய ஜனதாவில் சீட்டு பெற முயற்சி செய்தார். அதற்குள் லாலுஜி எனக்கு வாய்ப்பு கொடுத்து விட்டார். எனது சகோதரிகாக அல்லது கணவருக்காக பாஜகவில் முயன்றது கிடைக்கவில்லை.’ என்கிறார்.
பிஹாரின் கிரிமினல் பட்டியலில் உள்ள ரண்வீர் யாதவ், லாலு கட்சியில் எம்.எல்.ஏவாக இருந்தவர். கடந்த 2012-ல் ஒருமுறை ககரியா வந்த முதல் அமைச்சர் நிதீஷ் குமாரின் கூட்டத்தில் தற்காலிக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். இதில், ஏற்பட்ட கலவரத்தில் நிதீஷ் மீது தாக்குதல் நடத்தும் சூழல் ஏற்பட்டது.
அப்போது தன் ஐக்கிய ஜனதா எம்.எல்.ஏ மனைவியான பூணமின் பாதுகாப்பு காவலர் துப்பாக்கியை பிடுங்கிய ரண்வீர், வானத்தில் சுட்டு மிரட்டியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. எனினும், தம்மை கலவரக் காரர்களிடம் இருந்து காப்பற்றி விட்டதாக, ரண்வீரை பாராட்டினார் நிதீஷ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.