குஜராத் கலவரத்தின்போது நடந்த குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கில் 24 பேர் குற்றவாளிகள்; 36 பேர் விடுவிப்பு

குஜராத் கலவரத்தின்போது நடந்த குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கில் 24 பேர் குற்றவாளிகள்; 36 பேர் விடுவிப்பு
Updated on
2 min read

14 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

*

குஜராத் கலவரத்தின்போது குல்பர்க் சொசைட்டி பகுதிக்குள் 69 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 24 பேர் குற்றவாளிகள் என ஆமதாபாத் சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அவர்களுக்கான தண்டனை விவரம் வரும் 6-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி கோத்ரா ரயிலில் சென்ற கரசேவகர்கள் 58 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். இதையடுத்து குஜராத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. அப்போது, குல்பர்க் சொசைட்டி பகுதியின் குடியிருப்புக்குள் 400-க்கும் மேற்பட்டோர் கும்பலாக சென்று அங்கிருந்த முஸ்லிம் சமுதாயத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 69 பேர் பரிதாபமாக இறந்தனர். இதில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. ஈசான் ஜாப்ரியும் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கு ஆமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் நடக்கிறது. மொத்தம் 66 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதில் விசாரணை காலத்தில் 6 பேர் இறந்துவிட்டனர். 9 பேர் சிறையில் உள்ளனர். மற்றவர்கள் ஜாமீனில் வெளியில் உள்ளனர்.

இந்நிலையில், 14 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கில் 24 பேர் குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.பி.தேசாய் நேற்று தீர்ப்பளித்தார். அவர்களில் 11 பேர் மீது கொலை குற்றச்சாட்டு உள்ளது. வழக்கில் இருந்து 36 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பிபின் படேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் எர்டா ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர்.

பாஜகவைச் சேர்ந்த பிபின் படேல் தற்போது மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார். 2002-ல் படுகொலை நடந்தபோதும் அவர் கவுன்சிலராக இருந்தார். கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தொடர்ந்து நான்காவது முறையாக அவர் வெற்றி பெற்றுள்ளார்.

குல்பர்க் சொசைட்டி படுகொலை திட்டமிட்ட சதி என்ற எதிர்தரப்பு வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. அனைவர் மீதான திட்டமிட்ட சதி என்ற குற்றச்சாட் டுக்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று, 120 பி பிரிவின் கீழ் கூறப்பட்டிருந்த குற்றச்சாட்டை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

குல்பர்க் சொசைட்டி கொலை வழக்கில் 338 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் நேரடியாக கண்காணித்தது. குஜராத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக மொத்தம் 9 வழக்குகள் உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்து வருகின்றன. அவற்றில் குல்பர்க் சொசைட்டி கொலை வழக்கும் ஒன்று. இந்த வழக்கில் மே 31-ம் தேதிக்குள் தீர்ப்பை வெளியிட சிறப்பு நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜாகியா ஜாப்ரி வேதனை

குல்பர்க் சொசைட்டி தாக்குதலில் பலியான எம்.பி. ஈசான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி கூறியதாவது:

இந்த தீர்ப்பு திருப்திகரமாக இல்லை. குற்றம் சாட்டப்பட்ட வர்கள் அனைவரும் தண்டிக்கப் பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் அப்பாவி மக்களை எப்படி கொன்றார்கள், எப்படி உடைமைகளை அழித்தார்கள், எத்தனை பேர் வீடுகளை இழந்தனர் என்பதை எல்லாம் என் கண்களால் பார்த்தேன். ஒரு பெண் என்பதால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கேட்கும் துணிச்சல் எனக்கில்லை.

எனினும் அவர்களுக்கு கடும் ஆயுள் தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் குடும்பம், குழந்தைகளை விட்டு பிரிந்திருக்கும் வேதனையை, வலியை அவர்கள் உணர வேண்டும். என்னுடைய இந்தப் போராட்டம் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த தீர்ப்பால் என்னுடைய சட்டரீதியான போராட்டம் தொடரும். இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்.

இவ்வாறு ஜாகியா கூறினார்.

ஈசான் ஜாப்ரியின் மகன் தன்விர் ஜாப்ரி கூறும்போது, “குல்பர்க் சொசைட்டியில் 400-க்கும் மேற்பட்டோர் புகுந்து தாக்குதல் நடத்தினர். ஆனால், 24 பேர் மட்டும் குற்றவாளிகள் என அறிவித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. மேலும், 36 பேர் எப்படி விடுவிக்கப்பட்டனர் என்பது குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்துவேன். அதன்பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுப்பேன்” என்றார்.

டீஸ்டா சீதல்வாட் அதிருப்தி

குல்பர்க் சொசைட்டி தாக்கு தலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக சமூக சேவகர் டீஸ்டா சீதல்வாட் போராடி வருகிறார். இந்த தீர்ப்பு குறித்து அவர் நேற்று கூறும்போது, “சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக படித்து ஆய்வு செய்த பின்னர், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். குல்பர்க் சொசைட்டி தாக்குதலில் கிரிமினல் சதி உள்ளது என்று நாங்கள் கண்டிப்பாக நம்புகிறோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in