

மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ஜோதிராதித்ய சிந்தியா, காந்திலால் பூரியா மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் நேற்று மான்ட்சார் செல்லும் வழியில் கைது செய்யப்பட்டனர்.
மாண்ட்சார் நகரில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை இவர்கள் சந்திக்கச் செல்லும்போது, வழியில் இவர்களை போலீஸார் கைது செய்து, பின்னர் விடுதலை செய்தனர்.
இதுகுறித்து ரத்லம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமித் சிங் கூறும்போது, “வன்முறையால் பாதிக்கப்பட்ட மான்ட்சார் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே காங்கிரஸ் தலைவர்கள் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இத்தடை குறித்து அவர்களுக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.
ஜோதிராதித்ய சிந்தியா கூறும்போது, “144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள என்றால் நான் தனியாக செல்லவும் போலீஸார் அனுமதிக்காதது ஏன்?” என்றார்.
முன்னதாக இடஒதுக்கீடு போராட்டத் தலைவர் ஹர்திக் படேல், ம.பி.யின் நீமுச் மாவட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்டார்.
ஹர்திக் படேல் மற்றும் அவருடன் சென்ற ஐக்கிய ஜனதா தள தலைவர் அகிலேஷ் கத்தியாரை கைது செய்த போலீஸார், பின்னர் இவர்களை போலீஸ் வேனில் ஏற்றி ம.பி. எல்லைக்கு வெளியில் விட்டனர்.
மான்ட்சார் நகரில் கடந்த 6-ம் தேதி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 6 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மேற்கு ம.பி.யில் போராட்டம் மற்றும் வன்முறை பரவியதால் அமைதியை ஏற்படுத்த முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கடந்த சனிக்கிழமை உண்ணாவிரதம் தொடங்கினார். என்றாலும் மறுநாள் சவுகான் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். முன்னதாக, “விவசாயிகள் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் உறுதியளித்தார்.
துப்பாக்கிச்சூட்டில் இறந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க கடந்த கடந்த 8-ம் தேதி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மான்ட்சார் செல்லமுயன்றபோது வழியில் தடுக்கப்பட்டார்.