

நாடு தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திற்கான ரகசிய வாக்கெடுப்பு டிசம்பர் 20, 21-ம் தேதிகளில் நடைபெறுகிறது என எஸ்ஆர்எம்யூ பொதுச்செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.
போராட்டத்தை விளக்குவதற்கான கூட்டம் தென்னக ரயில்வே அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடந்தது. எஸ் ஆர் எம் யூ பொதுச் செயலாளர் கண்ணையா தலைமை தாங்கினார். கூட்ட முடிவுகளை பற்றி செய்தியாளர்களிடம் கண்ணையா பேசுகையில்,
அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளன பொது மகா சபை சார்பில் டெல்லியில் கடந்த செப்டம்பர் 13ம் தேதி கூட்டம் நடந்தது. அதில் 38 கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து,
7-வது சம்பள கமிஷன் அமைக்கவும், புதிய சம்பள விகிதங்களை அமலாக்கவும் மத்திய அரசு சம்மதித்தது. ஆனால், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், ரயில்வேயில் காலியாக உள்ள இரண்டரை லட்சம் இடங்களை நிரப்புதல், ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழித்தல், அடிப்படை சம்பளத்துடன் டி.ஏ-வை இணைத்தல் உள்ளிட்ட 36 கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க மறுத்து வருகிறது. அதனை ஏற்க வலியுறுத்தி நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தலாமா என தொழிலாளர்களிடம் டிசம்பர் 20, 21-ம் தேதிகளில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
தெற்கு ரயில்வேயில் பணியாற்றும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக தாம்பரம், செங்கல்பட்டு, பெரம்பூர், அரக்கோணம், மதுரை, ராமேஸ்வ ரம் உள்ளிட்ட பெரிய மற்றும் சிறிய ரயில் நிலையங்கள் என 1,000 இடங்களில் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படுகிறது.
தொழிலாளர்களின் வசதிக்காக ஆங்கிலம், தமிழ், மலையாளம், இந்தி மற்றும் தெலுங்கு மொழியில் வாக்கு சீட்டுக்கள் அச்சடிக்கப்பட் டுள்ளது. 66.13 சதவீதம் பேர் ஆதரவாக வாக்களித்தால், வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும்.
வேலை நிறுத்தப் போராட்டத் திற்கு முறைப்படி அரசிடம் கடிதம் கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.