

உத்தரபிரதேச அரசு பெண் களைக் கேலி செய்வதற்கு எதிராக ‘ஆன்டி ரோமியோ ஸ்குவாட்’ என்ற படையை உருவாக்கி யுள்ளது.
இதுகுறித்து வழக்கறிஞரும் ஸ்வராஜ் அபியான் கட்சி நிறுவனருமான பிரசாந்த் பூஷண் ட்விட்டர் பக்கத்தில் அவர், ‘‘ரோமியோ ஒரு பெண்ணை மட்டுமே காதலிக்கிறார். ஆனால் இந்து புராணத்தில் வரும் கிருஷ்ணர் பல பெண்களைக் கேலி செய்தவர். அவருக்கு எதிராக படை அமைக்க உ.பி. முதல்வர் ஆதித்யநாத்துக்கு துணிச்சல் இருக்கிறதா?’’ என கேள்வி எழுப்பியிருந்தார்.
இவரது கருத்துக்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் அவரது தலையை வெட்டிக் கொண்டு வருபவருக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என பஜ்ரங் தளம் அறிவித்தது. நொய்டாவில் உள்ள அவரது வீட்டுக்கு வெளியேயும் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.
இதனால் பதற்றம் ஏற் பட்டதை அடுத்து பிரசாந்த் பூஷணின் வீட்டுக்கு போலீஸார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இது தொடர்பாக ட்விட்டரில் அவர், ‘‘ரோமியோ படைகள் மற்றும் கிருஷ்ணர் தொடர்பான எனது ட்வீட் ஒரு சில மக்களின் மனதைப் புண்படுத்தி இருப்பதை உணர்ந்தேன். இதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள் கிறேன். அந்த பதிவையும் அழித்து விட்டேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.