Published : 22 Jun 2016 06:17 PM
Last Updated : 22 Jun 2016 06:17 PM

3 ஆண்டுகளில் வருமான வரியை முற்றிலும் ஒழிப்பேன்: சுப்பிரமணியன் சுவாமி

இந்திய வர்த்தகர்கள் கழகத்தில் சமீபத்தில் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, '3 ஆண்டுகளில் வருமான வரியையே ஒழிப்பேன்' என்று கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது: “நான் அரசின் ஓர் அங்கமாக இருந்தால் 7 நாட்களில் வருமான வரியை ஒழிப்பேன். ஆனால் அரசின் அங்கமாக இல்லை என்பதால், அடுத்த 3 ஆண்டுகளில் வருமான வரியை முற்றிலும் ஒழிப்பேன். ஊழல்கள் மலிந்த வருமான வரி அமைப்பை முற்றிலும் ஒழித்து விடுவேன்” என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கும் போது, "பணக்காரர்களுக்கு வருமான வரியை எப்படி ஏய்ப்பது என்பது தெரியும், ஏழைகள் வரிவலைக்குள் இல்லை. எனவே, நடுத்தர வர்க்கத்தினர் இளம் தொழில் நிபுணர்கள், மாதாந்திர வருவாய் ஈட்டுபவர்கள்தான் வருமான வரி செலுத்துகின்றனர்.

அதாவது, வருமான வரி மூலம் திரட்டப்படும் ரூ.2 லட்சம் கோடி வருவாயை மற்ற வருவாய் மூலம் ஈடுகட்ட முடியும். குறிப்பாக, ஸ்பெக்ட்ரம் மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு மூலம் ஈடுகட்ட முடியும். வரிச்சுமை இல்லையெனில் குடும்ப சேமிப்பு அதிகரிக்கும். அதனை முதலீடுகளாக மாற்ற முடியும்.

தற்போதைய வளர்ச்சி விகிதம் வறுமை மற்றும் வரியின்மையை ஒழிக்கப் போதுமானதல்ல, வளர்ச்சி இன்னும் துரிதகதியில் நடைபெற வேண்டும். பல நாடுகளை ஒப்பிடும் போது நமது நாடு நல்ல வளர்ச்சியையே பெற்று வருகிறது, ஆனால் இதுவும் போதுமானதல்ல. அடுத்த 10 ஆண்டுகளில் 10% வளர்ச்சி விகிதம் என்ற அடிப்படையில் வளர்ச்சியடைந்தால்தான் வறுமை, வேலையின்மை ஆகியவற்றைக் களைய முடியும்.

சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறைகளுக்கு உள்நாட்டு வங்கிகளிடமிருந்து கடன் தேவைப்படுகிறது. இவர்களுக்கு 9 சதவீதத்தில் இந்தத் துறைக்கு கடன் தேவைப்படுகிறது. எனவே குறைந்த வட்டி விகித பொருளாதார சூழல் நமக்குத் தேவை. இது ரகுராம் ராஜனை சிகாகோவுக்கு திருப்பி அனுப்பினால் மட்டுமே முடியும்.”

இவ்வாறு கூறினார் சுப்பிரமணியன் சுவாமி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x