மதிய உணவு திட்டத்துக்கு காமராஜர் பெயர் சூட்டவேண்டும்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் தமிழிசை நேரில் வலியுறுத்தல்

மதிய உணவு திட்டத்துக்கு காமராஜர் பெயர் சூட்டவேண்டும்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் தமிழிசை நேரில் வலியுறுத்தல்
Updated on
1 min read

நாடு முழுவதிலுமான மதிய உணவுத் திட்டத்துக்கு காமராஜர் பெயர் சூட்டவும், நாடார் சமுதாயம் தொடர்பான தவறான தகவல்களை 9-ம் வகுப்பு பாடநூலில் இருந்து நீக்கவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாடார் சங்கக் கூட்டமைப்பினருடன் அவரை டெல்லியில் நேற்று சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மனு அளித்தார்.

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரால் மதிய உணவு திட்டம் முதல்முறையாக சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது. பிறகு இத்திட்டம் 1960 தொடங்கி 1963-ம் ஆண்டுக்குள் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் அமல் படுத்தப்பட்டது. தொடர்ந்து பல் வேறு மாநிலங்களும் செயல்படுத் திய இத்திட்டம் 2001, நவம்பர் 28-ம் தேதி உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் நாடு முழுவதிலும் நடை முறைப்படுத்தப்பட்டது.

அதன் பிறகு எல்லா மாநிலங்க ளுக்கும் மத்திய அரசின் நிதியுதவி கிடைக்கத் தொடங் கியது. ரூ. 3,100 கோடியாக இருந்த இந்த நிதி 2006-07-ல் ரூ.4,813 கோடியாக உயர்த்தப்பட்டது. இதை தற்போதைய மோடி அரசு 2015-16-ம் ஆண்டுக்கு ரூ.9151.55 கோடியாக உயர்த்தியுள்ளது. நாடு முழுவதிலும் 12,65,000 பள்ளிகளில் சுமார் 12 கோடி மாணவர்கள் பலன் பெறும் இத்திட்டத்துக்கு இதுவரை யார் பெயரும் சூட்டப்படவில்லை.

இந்நிலையில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்திய காமராஜர் பெயரைத் தேசிய அளவிலான திட்டத்துக்குச் சூட்டுமாறு நாடார் சமூகத்தினர் கோரிக்கை எழுப்பியுள்ளனர். இத்துடன், நாடார் சமூகத்தினர் பூர்வகுடிகள் அல்ல, வந்தேறிகள் என்பது உட்பட சிபிஎஸ்இ 9-ம் வகுப்பு வரலாற்றுப் பாடநூலில் தவறான குறிப்புகள் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை நீக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை எழுந்து வருகிறது.

இது குறித்து தமிழிசை கூறும் போது, “பெருந்தலைவர் காமராஜரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் சில குறிப்புகள் உள்ளன. இதை நீக்க வேண்டும் என முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்தே தமிழக மக்களால் கோரிக்கை வைக்கப்பட்டு வரு கிறது. இது இன்னும் நிறை வேற்றப்படாமல் இருப்பது, காமராஜருக்கு அவமரியாதை செய்வதாக உள்ளது.

எனவே இதை நீக்க வேண்டும் எனக் கோரி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் மனு அளித்துள்ளோம். இதை உடனடி யாக பரிசீலிப்பதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இதுதவிர, தேசிய மதிய உணவுத் திட்டத்துக்கு காமராஜர் பெயர் வைக்க வேண்டும் என அமைச்சர் ஜவடேகரிடம் கோரிக்கை விடுத்தோம்” என்றார்.

மத்திய அமைச்சருடனான இந்த சந்திப்பில் நாடார் சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில் அதன் அமைப்பாளர்களான ராஜ்குமார், ரவீந்திரன் துரைசாமி, டி.கண்ணன், ஆரோக்கிய எட்வின், பரப்பாடி ராதாகிருஷ்ணன், முத்துக்குமார், தங்கம் செல்வராஜ், ஆலந்தூர் கணேசன் உட்பட பலரும் இடம் பெற்றிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in