

பெண் பொறியாளரை குஜராத் போலீசார் வேவு பார்த்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விரைவில் விசாரணையைத் தொடங்கும் என்று தெரிகிறது.
மும்பையில் ஞாயிற்றுக்கிழமை முகாமிட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டேவிடம் வேவு பார்ப்பு விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியது:
தொலைபேசி ஒட்டுக் கேட்பு குறித்து விசாரிக்க மத்திய உள்துறைச் செயலர், மாநிலங்களின் உள்துறைச் செயலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் பெண் பொறியாளர் வேவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார்.
மாநிலங்களில் குறிப்பிட்ட நபர்களின் தொலைபேசியை ஒட்டுக் கேட்பதற்கு உத்தரவிட மாநில உள்துறைச் செயலருக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் பிற மாநிலங்களில் வசிப்போரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்க மத்திய உள்துறைச் செயலரிடம் மாநில உள்துறை செயலர்கள் கண்டிப்பாக அனுமதி பெற வேண்டும்.
சம்பந்தப்பட்ட பெண் பொறியாளர் கர்நாடகம், மகாராஷ் டிரத்தில் தங்கியிருந்தபோது அந்தப் பெண்ணின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன. இது தொடர்பாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தும் என்று கூறப்படுகிறது.
பின்னணி
குஜராத் மேலிட உத்தர வின்பேரில் பெங்களூர் பெண் பொறியாளர் வேவு பார்க்கப்பட்டதாக கோப்ராபோஸ்ட், குலைல் ஆகிய இணையதள ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டன.
இந்த விவகாரத்தில் முதல்வர் மோடி, முன்னாள் அமைச்சர்
அமித் ஷா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு மகளிர் அமைப்புகளும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் குடியரசுத் தலைவரிடம் அண்மையில் புகார் மனு அளித்தன.
குஜராத்தில் நீதி விசாரணை
இதனிடையே வேவு பார்ப்பு விவகாரம் தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான கமிட்டியை குஜராத் அரசு அமைத்துள்ளது. அந்த கமிட்டி தற்போது விசாரணை நடத்தி வருகிறது.